Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இருமுனை விமர்சனம்

பிழைப்புக்காக மனைவி சஜினி பாண்டியுடன் ஊரைவிட்டு வெளியேறிய கிரி, பெரிய புள்ளி ஒருவரிடம் நாள் வாடகைக்கு கால்டாக்ஸி ஓட்டுகிறார். பணக் கஷ்டத்தால் கணவரை விட்டு பிரிய நினைக்கும் சஜினி பாண்டிக்கு பெரிய புள்ளி வலைவீசுகிறார். இந்நிலையில், அப்பகுதியில் அடுத்தடுத்து சில பெண்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். துப்பு கிடைக்காமல் போலீசார் தவிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

மனைவியின் தேவைகளை கணவன் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால், சொகுசாக வாழ ஆசைப்படும் மனைவி எப்படி தடம் மாறுவாள் என்ற விழிப்புணர்வு கதையை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார், கிரி. நடுத்தர குடும்ப கணவன் கேரக்டருக்கு நன்கு பொருந்திய அவர், மனைவியுடன் அனுசரித்து செல்லும் காட்சிகளில் பரிதாபத்தை வரவழைக்கிறார். குடும்பப்பாங்கான கேரக்டரில் மனதை கவரும் சஜினி பாண்டி, இறுதி முடிவில் வெறுப்பை சம்பாதித்து நன்றாக நடித்திருக்கிறார்.

மாடர்ன் மங்கையாக மதுமிதா, மனதை அள்ளும் பேபி ஹாலிசன் வசந்த், பெரிய புள்ளி ஸ்டாலின் உள்பட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். கதைக்கு தேவையான ஒளிப்பதிவை தினேஷின் கேமரா வழங்கியுள்ளது. பாசில் பின்னணி இசையும், புவனேஷ் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கவை. இன்றைய சமூக அவலத்தை எளிமையாக சொல்லியிருக்கும் இயக்குனர் கிரி, அதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.