Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அத்துமீறி பேசிய பாஜ எம்பி மகளை கடுமையாக எச்சரித்த சல்மான்கான்

மும்பை: பாலிவுட் முன்னாள் நடிகரும், பாஜ எம்பியுமான மனோஜ் திவாரியின் மகள் ரிதி திவாரி, இந்தியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். சமீபத்தில் சக போட்டியாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கும் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, உதிதி சிங் என்ற போட்டியாளருக்கு எதிராக ரிதி திவாரி வரம்புமீறி தரக்குறைவான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

வார இறுதி விவாத நிகழ்ச்சியில் ஆவேசம் அடைந்த தொகுப்பாளரும், பாலிவுட் முன்னணி நடிகருமான சல்மான்கான், மேடையில் ரிதி திவாரியை சரமாரியாக சாடினார். அப்போது சல்மான்கான், ‘மிகப்பெரிய இசை நட்சத்திரமாக வலம் வர வேண்டும் என்ற கனவுடன் இங்கு வந்த நீங்கள், ஷோவில் பயன்படுத்திய தரம் தாழ்ந்த வார்த்தைகள் உங்களை மட்டுமின்றி, உங்கள் தந்தையின் பெயரையும் சீரழித்துவிடும்.

இங்கு வருவதற்கு முன்பு உங்களை யாருக்கும் தெரியாது. நீங்கள் அரசியல் பிரபலத்தின் வாரிசு என்பதால் மட்டுமே இங்கு வந்தீர்கள் என்று மக்கள் பேசுகிறார்கள். உங்களை நான் கண்டிக்க மாட்டேன் என்றும் நினைக்கிறார்கள். இதை தட்டிக்கேட்க வேண்டுமா அல்லது புரிய வைக்க வேண்டுமா?’ என்று ஆக்ரோஷமாக எச்சரித்தார். சல்மான்கானின் கேள்விகளால் நிலைகுலைந்த ரிதி திவாரி, மேடையிலேயே கண்கலங்கினார்.