மும்பை: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பாலிவுட் நடிகர் ரோஹுல்லா மெஹ்தி என்பவர், மும்பை கோரேகான் பகுதியில் வசித்து வருகிறார். அவர் சமூக வலைத்தளங்கள் வழியாக மிகப்பெரிய அளவில் போதை பொருள் விற்பனை நெட்வொர்க்கை நடத்தி வருவதாக, காஷிமீரா குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஹிசார் சோதனைச்சாவடி அருகிலுள்ள வணிக வளாக பகுதியில் போலி வாடிக்கையாளரை அனுப்பிய போலீசார், அப்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு போதை பொருள் விற்க வந்த காசிப் என்பவரை பிடித்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் ரூ.5.60 லட்சம் மதிப்புள்ள 28 கிராம் ‘மெபெட்ரோன்’ போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த போதை பொருள் விநியோக கும்பலின் முக்கிய தலைவனாக ரோஹுல்லா மெஹ்தி செயல்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. வாட்ஸ்அப், ஸ்னாப்சாட் போன்ற செயலிகளின் மூலம் ஆர்டர்களை பெற்று, மும்பை முழுவதும் அவர் போதை பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளார். தொடர்ந்து மலாட் பகுதியிலுள்ள படப்பிடிப்பு ஸ்டுடியோவில் நடித்துக் கொண்டிருந்த ரோஹுல்லா மெஹ்தியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், பாலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
