Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

15 பிராண்ட் விளம்பரங்களை நிராகரித்தேன் கோடிகளை இழந்தேன்: சமந்தா பரபரப்பு பேட்டி

மும்பை: சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டி வருமாறு: என் 20வது வயதில் சினிமாவில் அறிமுகமானேன். அப்போது நான், எத்தனை பிராண்டுகள் என்னை அணுகி, எனது முகத்தை அவர்களின் பிராண்டுக்காக தேர்வு செய்கின்றனர் என்பதில் மட்டுமே என்னுடைய வெற்றி அடங்கி இருக்கிறது என்று நினைத்தேன். மிகப்பெரிய பன்னாட்டு பிராண்டுகள் அனைத்தும் என்னை தங்களது பிராண்ட் தூதராக்க விரும்பியதில் அதிக மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால், இப்போது சில தவறான பொருட்களை நான் தேர்வு செய்து, தவறான முன்னுதாரணமாக மாற முடியாது. சிறுவயதில் முட்டாள்தானமாக செயல்பட்ட அந்த சமந்தாவிடம் இப்போதுள்ள சமந்தா மன்னிப்பு கேட்க வேண்டும். வாழ்க்கையில் நான் செய்த செயல்கள் குறித்தும், எனது தேர்வுகள் குறித்தும் நான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இனி, எனக்கு மிகச்சரியானது என்று தோன்றுவதையே நான் பின்பற்ற வேண்டும். அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் குறித்தும் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன்.

அதில், மருத்துவர்கள் கொடுக்கும் சில அறிவுரைகளின் அடிப்படையிலேயே ஒப்புக்கொள்கிறேன். என்னை பின்பற்றுபவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். வெற்றி என்பது எப்படியாவது நம்மை வந்து சேரும். அதற்காக, நாம் ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்துவிட கூடாது. கடந்த வருடம் கிட்டத்தட்ட 15 பிராண்டுகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதனால், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை நான் இழந்துவிட்டேன். எனினும், அதை நினைத்து எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. ஏனெனில், மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கவே நானும் விரும்புகிறேன்.