Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புற்று நோயில் இருந்து மீண்டு வரும் வரை எனக்காக காத்திருந்த ராம் சரண்: சிவராஜ்குமார் நெகிழ்ச்சி

சென்னை: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ்குமார், ஜான்வி கபூர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 4ம் தேதி திரைக்கு வருகிறது் சென்னையில் நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் சிவராஜ்குமார் பேசியதாவது:

இயக்குனர் புச்சி பாபு முதலில் என்னிடம் இப்படத்தின் கதையை சொல்லி குரு என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கூறியபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. ராம் சரண் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

சிகிச்சைக்காக நான் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் இதில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ‘எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம், வேறு யாரையாவது வைத்து படப்பிடிப்பைத் தொடங்குங்கள்’ என்று நான் கூறினேன். ஆனால், ராம் சரணும், படக்குழுவினரும், ‘நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். நீங்கள்தான் இந்த ரோலில் நடிக்க வேண்டும்’ என்று அன்போடு எனக்காக நீண்ட நாள்கள் காத்திருந்தனர். அவர்களின் அந்தப் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை கலைஞராக இருந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவர் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ராம் சரண் தனது கதாபாத்திரத்திற்காக அவரது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். உங்களை போல நானும் படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.