இந்தி நடிகை பாத்திமா சனா ஷேக், ‘தங்கல்’ என்ற படத்தில் ஆமிர் கான் மகளாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு தன்னை ஒரு சிறந்த நடிகையாக முன்னிறுத்த முயற்சி செய்து வருகிறார். அதே நேரத்தில் சர்ச்சைக்கு பெயர் போனவராகவும் இருக்கிறார். ஆமிர் கானுடன் டேட்டிங் செல்வதாக சில ஆண்டுகளுக்கு முன் தகவல் பரவியது. தனது வெளிப்படையான கருத்துக்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். அந்தவகையில் சமீபத்தில் பாத்திமா சனா ஷேக் பேசியுள்ள கருத்துகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், ‘பாலிவுட் சினிமாவில் பெண்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் குறைவாகவே உள்ளன. ஆண்களை ஒப்பிடுகையில் பெண்களுக்கு நல்ல, ஆழமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கும் சில பிரிவினைவாத விஷயங்கள் இருப்பது வருத்தம் தருகிறது. சில நேரங்களில் வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கும். அப்போது, பணத்துக்காக நமக்கு விருப்பமில்லாத பணிகளைக்கூட செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
நாங்கள் வசதியான குடும்ப பின்னணியிலிருந்து வரவில்லை. சில நேரங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். கிடைக்கும் சொற்ப வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நாம் எவ்வளவுதான் கனவு கண்டாலும், அதை தீர்மானிப்பது நாமாக இருக்க முடியவில்லை. வருமானத்துக்காக, வாழ்க்கைக்காக எதையும் செய்யலாம், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
