சென்னை: பழைய காசோலைகளைத் திருடி பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை அம்பிகா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார். 80களின் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. திரையுலகில் சொந்த சகோதரிகளாக இருந்த இவர்களுக்கு இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது.
நடிகை ராதா, சென்னை போரூரில் "RR Gardens" என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசரக் கட்டணங்களுக்காக கையெழுத்திட்ட சில காலியான காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம். 2025 ஆம் ஆண்டு தொழில் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டதால், வங்கியிலிருந்து புதிய காசோலை புத்தகம் வழங்கப்பட்டு பழைய காசோலை புத்தகம் பயன்பாட்டில் இல்லாமல் போனது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ம் தேதி அன்று வங்கியிலிருந்து ராதாவுக்கு வந்த மின்னஞ்சலில், பயன்பாட்டில் இல்லாத அவரது பழைய 5 காசோலைகள், அக்கா அம்பிகா நாயர் பெயரில் பணமாக்குவதற்காக வங்கியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட 5 காசோலைகளின் மொத்தத் தொகை சுமார் ரூ.43.62 கோடி ஆகும். இதனை தொடர்ந்து உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து அந்த காசோலைகளுக்கான பண பரிவர்த்தனையை ராதா நிறுத்தியுள்ளார்
இதனை தொடர்ந்து வங்கியில் விசாரித்த போது, அந்த பழைய காசோலைகளில் தொகையையும் பெயரையும் நிரப்பியது ராதாவின் சகோதரரான மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் கையெழுத்து என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ஃபெமா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் தரைத்தள பகுதியில் அம்பிகா தங்கியிருந்த சூழலில், ராதா இல்லாத நேரத்தில் அவரது அறைக்குள் புகுந்து, கையெழுத்திட்ட பழைய காசோலைகளை திருடி, சட்டவிரோதமாக பணமாக்க முயன்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, தனது அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கம், வைர நகைகள், சொத்து மற்றும் வங்கி ஆவணங்கள், பரிசுகள் உள்ளிட்டவற்றை சரிபார்க்க விடாமல் அம்பிகாவும் சகோதரர் அர்ஜுன் நாயரும் சட்டவிரோதமாகத் தடுத்து வருவதாகவும் ராதா தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தன் அனுமதியின்றி காசோலைகளை திருடி, போலியாக நிரப்பி ஏமாற்ற முயன்ற அக்கா அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் அர்ஜுன் நாயர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் ராதா முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
