Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

4 முதல்வர்களின் படங்களில் நடித்தவர்: சவுகார் ஜானகி காலமானார்

சென்னை: நடிகை சவுகார் ஜானகி (94), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார் சவுகார் ஜானகி. கடந்த 2 வாரங்களாக அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.

வரும் டிசம்பர் மாதம் தனது 95வது பிறந்தநாளை கொண்டாட இருந்த அவர், திரையுலகில் தொடர்ந்து 70 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். தென்னகத்தின் 4 முதல்வர்களுடன் கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார். கலைஞர் கதை, வசனத்தில் ‘குலக்கொழுந்து’ என்ற படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். தவிர, ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

என்.டி.ராமராவின் முதல் கதாநாயகி சவுகார் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஆந்திராவின் முன்னணி கதாநாயகர்கள் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், மலையாள முன்னணி ஹீரோ பிரேம் நசீர் உள்பட பலருடன் நடித்துள்ள சவுகார் ஜானகி, தமிழில் பாவேந்தர் பாரதிதாசன் வசனம் எழுதிய ‘வளையாபதி’ என்ற படத்தில் அவரது வசனத்தைப் பேசி நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், எம்.ஆர்.ராதா, சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, சந்தானம் உள்பட அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1931 டிசம்பர் 12ம் தேதி, ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கோதாவரி மாவட்டத்தில் பிறந்த சவுகார் ஜானகி, தனது 15வது வயதில் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணியாற்றினார். அவரது இனிமையான குரலைக்கேட்ட தெலுங்கு தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி, அவரை சினிமாவில் நடிக்க வைக்க அணுகியபோது, சவுகார் ஜானகியின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.

பிறகு சவுகார் ஜானகிக்கு திருமணம் செய்து வைத்தனர். அடுத்த ஆண்டிலேயே குழந்தை பெற்றதால் ஏற்பட்ட குடும்ப வறுமையைப் பற்றி வி.என்.ரெட்டியிடம் சொல்லி அழுத சவுகார் ஜானகி, வி.என்.ரெட்டி வீட்டு வாசலில் கைக்குழந்தையுடன் நின்று வாய்ப்பு கேட்டார். ‘உனக்கு திருமணமாகி விட்டது. ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. ஹீரோயினாக நடிப்பது சாத்தியம் இல்லை’ என்று தயாரிப்பாளர் மறுத்தார்.

ஆனால், தொடர்ந்து அவரிடம் போராடிய சவுகார் ஜானகி, ‘எப்படியாவது எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று கெஞ்சினார். இதனால் மனமிறங்கிய தயாரிப்பாளர், தனது தம்பி தயாரிக்கும் படத்துக்கு அவரை சிபாரிசு செய்தார். என்.டி.ராமாராவ் நடித்த அப்படம், ‘சவுகார்’. கடந்த 1947ல் வெளியான இதில் ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பாட்லே, பிரபல இயக்குனர் எல்.வி.பிரசாத் போன்றோர் பணியாற்றி இருந்தனர்.

இதையடுத்து தமிழில் ஜெமினி நிறுவனம் உருவாக்கிய படத்தில் சவுகார் ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தவர், காஸ்ட்யூம் மேனேஜராக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக மாறிய ஜெமினி கணேசன். இதனால் அவரை சவுகார் ஜானகி, தனது சகோதரர் என்று பாசமழை பொழிந்தார்.

எம்.ஆர்.ராதாவுடன் ‘குமுதம்’, சிவாஜி கணேசனுடன் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘உயர்ந்த மனிதன்’, ‘பாபு’, ‘புதிய பறவை’, எம்ஜிஆருடன் ‘என் கடமை’, ‘ஒளி விளக்கு’, ஜெமினி கணேசனுடன் ‘மாலையிட்ட மங்கை’, ‘காவியத்தலைவி’, ‘இரு கோடுகள்’ போன்ற படங்களில் நடித்திருந்த சவுகார் ஜானகி, கே.பாலசந்தர் இயக்கிய முதல் படமான ‘நீர்க்குமிழி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’ போன்ற படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்துடன் ‘தில்லு முல்லு’, சிறுவயது கமல்ஹாசனுடன் ‘பார்த்தால் பசி தீரும்’ ஆகிய படங்களில் நடித்தார். பிறகு ‘காவியத்தலைவி’ என்ற சொந்தப் படத்தை தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 450 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். 1969-1970ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 2022ல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதால் கவுரவித்தது.