மும்பை: கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதல் திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறிய சமந்தா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தாய்மார்கள் தங்களின் கர்ப்ப கால அனுபவங்களை பகிர்ந்து, தாய்மை குறித்த ஆலோசனைகளை சமந்தாவுக்கு வழங்கினர். அப்போது சிலர், ‘குழந்தைக்காக என்னென்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.
குழந்தைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ஏற்கனவே வாங்கிவிட்டதாக சொன்ன சமந்தா, தற்போது அந்த பொருட்களை பார்க்கும்போது தனக்கு பதட்டமாக இருக்கிறது என்றும், அதனால் தற்போதைக்கு எல்லாவற்றையும் பேக் செய்து, அந்த பையை லேப்டாப் ஸ்டாண்டாக பயன்படுத்தி வருவதாகவும் பதிலளித்தார். தாய்மை அடைவதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சமந்தாவிடம் அவர்கள் கேட்டபோது, குழந்தைக்கு பாலூட்டுவது மற்றும் தாலாட்டு பாடி தூங்க வைப்பது உள்பட அந்தந்த தருணங்களை அனுபவிக்க தான் ஆவலுடன் காத்திருப்பதாக சொன்னார்.
‘இந்த விஷயங்கள் ஒரு முழுநேர வேலையாகிவிடும். இது ஒரு அழகான, அற்புதமான மற்றும் வாழ்க்கையையே அடியோடு மாற்றக்கூடிய ஒரு அனுபவமாக இருக்கும்’ என்றும் அவர் சொன்னார். இதை தொடர்ந்து, ‘குழந்தைக்கு என்ன பெயர் சூட்ட திட்டமிட்டு இருக்கிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டபோது, ‘பெயரை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இதுபோன்ற விஷயத்தில் அனைவரது உதவியும் எனக்கு தேவைப்படுகிறது’ என்றார். அவரது வேண்டுகோளை தொடர்ந்து பல ரசிகர்கள், குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்து பதில் சொல்வதாக தெரிவித்தனர்.
