Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினிமாவில் யாரையும் நம்பக்கூடாது: நடிகை ஹென்ஷா பரபரப்பு

சென்னை: ‘சாமி 2’, ‘நானும் ரவுடிதான்’, ‘ரஜினி முருகன்’, ‘மாப்பிள்ளை சிங்கம்’, ‘நேற்று இன்று நாளை’ உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹென்ஷா தீபன். இப்போது சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்திருக்கிறார். அவர் கூறியது: நான் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள். அப்பா இறந்த பிறகு, அம்மா, தங்கையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் இருந்தது.

இதனால் உயர்கல்வி கூட படிக்க முடியாமல் வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, அங்கு சினிமா உலகை சேர்ந்த பலர் வருவார்கள். அவர்கள்தான் நடிக்க கேட்டார்கள். இப்படித்தான் நடிக்க வந்தேன். பல படங்களில் நான் நடித்த காட்சிகளை நீக்கிவிடுவார்கள். எடிட்டிங்கில் போய்விட்டது என்பார்கள். அது மனதுக்கு பெரும் பாரமாக இருக்கும். ஆனாலும் நம்பிக்கையுடன் நடித்து வந்தேன்.

இப்போது திருமணமும் ஆகிவிட்டது. தொடர்ந்து நடிக்க எனது கணவர் ஊக்கம் தந்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் காட்சிகளில் ஆசையுடன் நடித்தேன். படத்தில் அந்த காட்சிகள் இடம்பெறாதபோது, ஏமாற்றமாக இருந்தது.

சினிமா உலகில் யாரையும் நம்பக்கூடாது என்பதுதான் இத்தனை கால நடிப்பு அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம். நமக்கு கிடைக்க வேண்டியதை பெற நாம்தான் போராட வேண்டும். அந்த வகையில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்து, பெயரும் கிடைத்திருக்கிறது. தமிழ் பெண்கள் சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இயக்குனர்கள் அதிகம் வாய்ப்புகள் தர வேண்டும்.