Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினிமாவில் பிரிவினைவாதம் அதிகம்: பாத்திமா சனா ஷேக் வேதனை

மும்பை: இந்தியில் ‘தங்கல்’ என்ற படத்தில் ஆமிர் கான் மகளாக நடித்து பிரபலமானவர், பாத்திமா சனா ஷேக். தன்னை சிறந்த நடிகையாக முன்னிறுத்த தீவிர முயற்சி செய்து வரும் அவர், பலத்த சர்ச்சைகளை உருவாக்குவதில் பலே கில்லாடி. சில வருடங்களுக்கு முன்பு, ஆமிர் கானுடன் டேட்டிங் செல்வதாக அவரை பற்றி தகவல் வெளியானது. தினமும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், தனது வெளிப்படையான பேச்சால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி அவதிப்படுகிறார்.

சமீபத்தில் பாத்திமா சனா ஷேக் பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் பேசுகையில், ‘பாலிவுட்டில் பெண்களுக்கு நல்ல வேடங்கள் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கின்றன. ஆண்களை ஒப்பிடுகையில், பெண்களுக்கு ஆழமான கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அங்கும் சில பிரிவினைவாத விஷயங்கள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சில நேரங்களில் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும். அப்போது, பணத்துக்காக நமக்கு விருப்பம் இல்லாத பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

நாங்கள் வசதியான குடும்பத்தில் இருந்து வரவில்லை. சில நேரங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். கிடைக்கும் சொற்ப வாய்ப்புகளில் எது சிறந்ததோ, அதை தேர்வு செய்து நடிக்க வேண்டியிருக்கும். மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும், அதை தீர்மானிப்பது நாமாக இருக்க முடியவில்லை. வருமானத்துக்காக, வாழ்க்கைக்காக எதையும் செய்யலாம், எந்த கேரக்டரிலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்’ என்று வேதனைப்பட்டார்.