Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செப்டம்பர் 1ம் தேதி முதல் சினிமா ஸ்டிரைக்: தயாரிப்பாளர் சங்கம் திடீர் முடிவு

சென்னை: வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப்போவது இல்லை, படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கூட்டி, தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரத்திற்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த படங்களை திரையரங்குளில் வெளியிடுவோம் என்று முடிவு செய்துள்ளார்கள்.

தயாரிப்பாளர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்கள் தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. ரூ.700 கோடிக்கு மேல் ஒவ்வொரு வருடமும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவினை கண்டித்து வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழ்த் திரையுலகில் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது இல்லை என்றும்,

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் உள்பட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் முடிவெடுத்துள்ளோம். தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்று அரசு மூலம் தீர்வு காண உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.