* பிரபாஸ் நடிக்கும் ‘ஃபெளஜி’ பான் இந்தியா படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், வரும் தீபாவளியன்று இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் இறுதியில் முடிவடையும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படம் திரைக்கு வரும் என்றும் தெரிகிறது.
* ஷாலினி அஜித்குமார் தயாரிக்க, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ படத்தில் பார்த்திபன், பிரபு, ஸ்ரீலீலா, தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வரும் நவம்பர் 12ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.
* ராம் சரண் நடிக்கும் 17வது படத்தை ‘புஷ்பா’ சுகுமார் இயக்குகிறார். இதில் சாரா அர்ஜூன் ஹீரோயினாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்குகிறது.
* வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் சிம்பு, அடுத்து ‘டியூட்’ கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து சிம்பு நடிக்கும் 50வது படத்தை அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புவின் 50வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
* சித்தா’ அருண்குமார் படத்தில் நடிப்பதால் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கும் படத்தை தள்ளிப்போட்டிருக்கிறார் கமல்ஹாசன்.
* தமிழில் வெளியான ‘ரங்கூன்’, ‘அமரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் நடிக்கும் ‘ஓம்’ பான் இந்தியா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் மம்மூட்டி, அடுத்து மலையாளத்தில் நிதிஷ் சகாதேவ் இயக்கும் ‘மேளா’, காலித் ரஹ்மான் இயக்கும் ‘மட்டஞ்சேரி மாஃபியா’, ஷிபின் முருகேஷ் இயக்கத்தில் உருவாகும் காமெடி படத்தில் நடிக்கிறார்.
* மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’, வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வருவதாக இருந்த நிலையில், தற்போது ஜனவரி 29ம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ‘புருஷன்’, வரும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
* சுஜீத் இயக்கத்தில் ‘ப்ளடி ரோமியோ’ என்ற தெலுங்கு படத்தில் நானி நடித்து வருகிறார். இதில் ‘துரந்தர்’ படத்தின் மூலம் பிரபலமான விவேக் சின்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டெல்லியில் நடந்து வரும் படப்பிடிப்பில் விவேக் சின்ஹா விரைவில் இணைகிறார்.
* திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நான் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அப்படி இருக்கும்போது, புதிய படங்களில் நடிக்க நான் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்பதாக சொல்வது எப்படி சாத்தியம்? அவை அனைத்தும் வதந்திகள், யாரும் நம்பாதீர்கள்’ என்று, புலம்புகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.
* தமிழில் வெளியான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘ஆனந்த ஆராதனை’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்த மோகன், சுஹாசினி, பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
