Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தர்மசங்கடத்தில் தவித்த கீதா கைலாசம்

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண் அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையப்படுத்தி எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘அங்கம்மாள்’. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ், என்ஜாய் பிலிம்ஸ், ஃப்ரோ மூவி ஸ்டேஷன் சார்பில் கார்த்திகேயன்.எஸ்., ஃப்ரோஸ் ரஹீம், அஞ்சாய் சாமுவேல் தயாரித்துள்ளனர். விபின் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். அங்கம்மாள் கேரக்டரில், கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்துள்ளார். வரும் 21ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து கீதா கைலாசம் கூறுகையில், ‘அங்கம்மாள் கேரக்டரில் நடிக்க கேட்டபோது நான் பயந்தேன்.

ரவிக்கை அணியக்கூடாது என்றபோது தயங்கினேன். பிறகு காஸ்ட்யூம் டிசைனர் வந்து, எப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னதால் தர்மசங்கடமின்றி நடித்தேன். என் வீட்டு பால்கனியில் அமர்ந்து பீடி, சுருட்டு பிடித்து பயிற்சி பெற்றேன். என் வீட்டில் இருந்தவர்கள் பதறினர். ‘அப்படியே புகைப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடாதே’ என்று எச்சரித்தனர். சுந்தரி என்ற பெண்ணை இன்ஸ்பிரேஷனாக நினைத்து நடித்தேன். ஆனால், அவரளவுக்கு என்னால் நடிக்க முடியவில்லை’ என்றார். அஞ்சாய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, முகமத் மக்பூப் மன்சூர் இசை அமைத்துள்ளார்.