Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக நடிக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர்

சென்னை: ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஷபீர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதற்கு நடுவே நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளை மகிழ்விக்கும் சேவையிலும் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து ஷபீர் கூறியது: பெற்றோர் கேரளாவை சேர்ந்தவர்கள். நான் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். நடிப்பு மீது ஆசை இருந்தது. தொடர் முயற்சிகளுக்கு பிறகு 2014ல் ‘5,4,3,2,1’ தமிழ் படத்தில் நடித்தேன். அதன் பிறகு ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் ஹீரோவாக நடித்தேன். ‘சார்பட்டா பரம்பரை’ எனது சினிமா கேரியரை மாற்றியது. அதன் மூலம்தான் இப்போது எல்லா தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கிறேன்.

தென்னிந்திய மொழிகளில் தமிழ் எனக்கு எப்போதுமே நெருக்கமானது. அதே சமயம், எந்த துறை சிறப்பாக இருக்கிறது என கேட்டால் 4 மொழி துறையுமே இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப நிறைய புதுமைகளை கையாண்டு வருகிறது. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘சார்பட்டா பரம்பரை 2’, பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘தண்டக்காரண்யம்’, ‘பொம்மரிலு’ பாஸ்கர் இயக்கும் ‘ஜேக்’ தெலுங்கு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தேன். இப்போதும் மேடை நாடகங்களில் நடிக்கிறேன். அதன் ஒரு பகுதியாக எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு வாரத்தில் 2 நாட்கள் எனது குழுவுடன் சென்று நடித்துவிட்டு வருகிறேன். அதில் ஜோக்கர் வேடமிட்டு, குழந்தைகளை மகிழ்விப்பதுதான் எனது வேலை. இது மனதுக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது.