Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டிசி விமர்சனம்...

தலைவாசல் விஜய் தலைமையிலான கூலிப்படையை சேர்ந்த தேவதாஸ் என்கிற லோகேஷ் கனகராஜ், தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார். அப்போது போலீசாரை தாக்கி ஆயுதங்களை கடத்துகிறார். இதையடுத்து நடக்கும் சம்பவங்களில், திடீரென்று போலீஸ் அதிகாரியை கொன்றுவிடுகிறார். இதனால் கொதிக்கும் காவல்துறை அதிகாரிகள், லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது கும்பலை தீர்த்துக்கட்ட விரட்டுகின்றனர்.

தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நடக்கும் போராட்டத்தில் லோகேஷ் கனகராஜ் சந்திக்கும் சம்பவங்கள் என்னென்ன? அதன் முடிவு என்ன என்பது, யாரும் எதிர்பாராத விறுவிறுப்பான கிளைமாக்ஸ். தேவதாஸ் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் வரும் முதல் வார்த்தை, D. சந்திரா என்பதை எழுதினால், C. ‘தேவதாஸ் சந்திரா’ என்பதை சுருக்கி ‘DC’ என்று தலைப்பு வைத்திருக்கின்றனர்.

ஒரு இயக்குனராக ஆக்‌ஷன் மசாலா படங்களை இயக்கி வெற்றிபெற்ற லோகேஷ் கனகராஜ், இதில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். முழு படத்தையும் தனது தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பு, பாடிலாங்குவேஜ், தோற்றம் அனைத்தும் தேவதாஸ் கேரக்டருக்கு இயல்பாக பொருந்தியுள்ளது. போலீசாருடன் அவர் மோதும் காட்சிகள், படபடவென்று வெடித்து தெறிக்கும் பட்டாசுகள்.

தங்கும் விடுதியின் கிளப்பில் பாடும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை அவர் சந்தித்து மனதை பறிகொடுக்கும் காட்சிகளும், பிறகு வாமிகா கபியை சந்தித்த பிறகு ஏற்படும் மாற்றங்களும், அப்போது அவர்களின் பேச்சும், மேனரிசங்களும் ரசிக்க வைக்கிறது. சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை ரசிகர்கள் இதயத்தில் வைத்து ஆராதிப்பார்கள். அழகும், இளமையும், புன்னகையும் அவரை மறக்க முடியாமல் செய்கிறது. தலைவாசல் விஜய் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்.

சந்திராவாக வரும் வாமிகா கபியின் கேரக்டரும், அதை அவர் துணிச்சலாக அணுகி நடித்திருக்கும் விதமும் பாராட்டுக்குரியது. லோகேஷ் கனகராஜின் தந்தையாக கஸ்தூரிராஜா, மோட்டார் மெக்கானிக்காகவே மாறி யதார்த்தமாக நடித்துள்ளார். மகனிடம் பேச மறுத்து, கடைசிவரை அந்த கெத்தை கடைப்பிடித்து, நல்ல குணச்சித்திர நடிகராக மிளிர்கிறார். போலீஸ் அதிகாரி போஜராஜ் கேரக்டரில் கிரிஷ் தயாள் அசத்தியுள்ளார். கடைசிவரை லோகேஷ் கனகராஜுடன் அவர் ஆடும் ஆடுபுலி ஆட்டம் விறுவிறுப்பாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது.

முக்கிய கேரக்டர்களில் அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, சரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அதுல், மனோஜ் சஷி, கலையரசன்.ஆர், ஃபிராங்க்ளின் ஜேக்கப், திலீபன்.கே, கர்ணராஜா, அஷ்ரப் மல்லிசேரி,காக்கா கோபால் உள்பட பலர், அந்தந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ஆக்‌ஷன் கதைக்கேற்ற வண்ணங்களுடன், காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியுள்ள முகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு, படத்தின் தூணாக இருக்கிறது. இன்னொரு ஹீரோ என்று அனிருத் பின்னணி இசையை குறிப்பிடலாம்.

அது காட்சிகளின் வீரியத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவர் இசை அமைத்த பாடல்கள், கதையுடன் இணைந்து வருகின்றன. வரிகள், கேட்பதற்கு அர்த்தமுள்ளதாக இருக்கின்றன. உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை தூக்கும் கேங்ஸ்டர் கதையில் காதல், ஆக்‌ஷன், சென்டிமெண்ட், எமோஷன் கலந்து, ஜனரஞ்சகமான கமர்ஷியல் படத்தை கதை, திரைக்கதை எழுதி அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

கூடுதல் திரைக்கதையை அருண் ரஞ்சன் எழுதியிருக்கிறார். அருண் மாதேஸ்வரன், ஃபிராங்க்ளின் ஜேக்கப் இணைந்து யதார்த்தமான வசனங்களை எழுதியுள்ளனர். ஜி.கே.பிரசன்னா, ஹரீஷ் அருண்.எம் ஆகியோரின் எடிட்டிங், கண்ணன்.எஸ் அரங்க வடிவமைப்பு, பி.சி ஸ்டண்ட்ஸின் சண்டைக்காட்சிகள், தவிர ஆடை வடிவமைப்பு, மேக்கப், ஒலிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆக்‌ஷன் பட ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்.