Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த தனுஷ்

சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளையொட்டி நடந்த ரசிகர் மன்ற விழாவில், பல கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தனுஷ், தற்போது சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டிடத்தை கட்டிக் கொடுத்துள்ளார். அந்த கட்டிடத்துக்கு ‘தனுஷ் பிளாக்’ என்று பெயரிட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ‘நான் நிறையபேரை சந்திக்கிறேன். அவர்களில் பத்தில் எட்டு பேருக்கு தமிழ் எழுத படிக்கவே வருவதில்லை. ஆனால், ஆங்கிலம் நன்றாக தெரிகிறது. இது மிகவும் வருத்தமான விஷயம்.

நான் பெல்ஜியத்தில் பிரெஞ்சு படத்தில் நடித்தபோது, ‘ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டனர். ‘தெரியும்’ என்று சொன்னபோது, அனைவரும் என்னை ஆச்சரியமாக பார்த்தனர். ‘எதற்காக இவ்வளவு ஆச்சரியப்படுகிறீர்கள்?’ என்று நான் கேட்டபோது, ‘உங்கள் தாய்மொழிதானே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்? ஆங்கிலம் என்பது உங்களுக்கு போனஸ் மொழிதானே?’ என்றனர். முதலில் உங்களின் தாய்மொழி தெரிய வேண்டும்.

பத்தில் எட்டு பேருக்கு தமிழ் எழுத படிக்க வருவதில்லை. தமிழ் வரவில்லை என்று சொல்வது பெருமையான விஷயம் கிடையாது. தாய்மொழி தெரியவில்லை என்று சொன்னால், அது பெரிய அவமானம். கண்டிப்பாக தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று மாணவ, மாணவிகளுக்கு அட்வைஸ் செய்தார்.