மும்பை: தமிழில் சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ படத்தில் நடித்தவர், பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி. அவரது சகோதரியும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான குஷ்பு பதானி, சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக்கலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் அவர், கார்பன் டை ஆக்சைடு காஸ் மூலம் இயங்கும் அதிநவீன ஏர் பிஸ்டல் ரக துப்பாக்கியை கையில் ஏந்தியபடி வெளியிட்டுள்ள ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
அப்பதிவில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பகிர்ந்துள்ள அவர், இதுகுறித்து கூறியிருப்பதாவது: இது முற்றிலும் தற்காப்புக்கு மட்டுமே பயன்படக்கூடியது. இது எந்த வகையிலும் விளையாட்டு பொருள் அல்ல என்பதால், துப்பாக்கி உண்மையானதாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பொதுமக்கள் அனைவரும் அதிக விவேகத்துடனும், பொறுப்புணர்வுடனும் மட்டுமே இதை கையாள வேண்டும்.
இது எடை குறைவாக இருப்பதால், ஆபத்தான காலங்களில் தற்காப்புக்காக பெண்கள் எளிதில் எடுத்து செல்ல முடியும் என்றாலும், உரிய துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் முறையான பாதுகாப்பு பயிற்சி பெறாமல், யாரும் இதை அலட்சியமாக கையாளக்கூடாது. இந்தியாவில் குறைந்த திறன் கொண்ட ஏர் துப்பாக்கிகளுக்கு உரிம விதிகளில் விலக்குகள் இருந்தாலும், அரசு வகுத்துள்ள சட்ட நடைமுறைகளை முழுமையாக சரிபார்த்த பிறகே இதை பொதுமக்கள் வாங்க வேண்டும்.
