தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தீபாவளி போனஸ் - திரை விமர்சனம்

தீபாவளிக்கு 3 நாட்கள் இருக்கும்போது கதை தொடங்குகிறது. எளிய சம்பளத்துக்கு கொரியர் சர்வீஸில் பணியாற்றும் நடுத்தர ஆசாமி விக்ராந்த். அவரது மனைவி ரித்விகா, ஒருவரது வீட்டில் சொற்ப சம்பளத்துக்குப் பணியாற்றுகிறார். அவர்களுக்கு ஒரே மகன். 2 ஆயிரம் ரூபாய் போனஸ் கிடைத்தால், தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடலாம் என்று ஏங்கும் விக்ராந்த், குறித்த நாளில் போனஸ் கிடைக்காமல் தவிக்கிறார். அப்போது போலீஸ் டிரெஸ், ஷூ கேட்டு மகன் நச்சரிக்கிறான். விக்ராந்துக்கு ஆயிரம் ரூபாயிலாவது ஹெல்மெட் வாங்க வேண்டும் என்று ரித்விகா போராடுகிறார். மனைவி ஆசைப்பட்ட சேலையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விக்ராந்த் துடிக்கிறார்.

இந்நிலையில், திடீரென்று சிலர் அவரைக் கடுமையாகத் தாக்குகின்றனர். அவர்களைக் கண்டுகொள்ளாத போலீசார், விக்ராந்தை லாக்கப்பில் வைத்து சரமாரியாக அடிக்கின்றனர். விடிந்தால் தீபாவளி. கணவனைக் காணாமல் ரித்விகாவும், அப்பாவைக் காணாமல் மகனும் துடிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. மதுரை பகுதியிலுள்ள நடுத்தரக் குடும்பம், தீபாவளி கொண்டாட்டத்துக்கு எப்படி தயராகிறது என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கும் இயக்குனர் ஜெயபால்.ஜேவை பாராட்ட வேண்டும். திருப்பரங்குன்றத்தின் பிரமாண்டத்தையும், மதுரையின் தீபாவளி கொண்டாட்டத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார். பெரிதாக சாதிக்க முடியாத எளிய குடும்பத்தலைவனாக விக்ராந்த் சிறப்பாக நடித்துள்ளார். மனைவி, மகனை மகிழ்விக்க கடைவீதியில் கூவிக்கூவி சட்டை விற்பது அருமை.

கணவனுக்காக உருகி, மகனுக்காகத் தவித்து, தனது கேரக்டருக்கு 100 சதவீதம் நியாயம் செய்துள்ளார் ரித்விகா. ஹெல்மெட் வாங்க ஆயிரம் ரூபாய் அட்வான்சுக்கு கெஞ்சுவது உருக வைக்கிறது. மகனான நடித்த சிறுவன், ேபானஸ்சுக்காக முதலாளியிடம் தொழிலாளிகளுக்காகப் பரிந்து பேசும் நபர் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர். திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகை எந்தப் படமும் இப்படிக் காட்டியதில்லை. அந்தவிதத்தில் கவுதம் சேதுராமனின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. மரியா ஜெரால்டுவின் இசை, காட்சிகளின் தன்மையைக் கெடுக்காதது பெரும் ஆறுதல். ஒரு எளிய குடும்பத்தின் தீபா‘வலி’யை இயக்குனர் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்.