Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படப்பிடிப்பில் நடந்த சம்பவம் மட்டனை வெறுக்கும் அனுபமா

சென்னை: தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது பாலிவுட்டுக்கும் சென்றுள்ளார். இந்நிலையில், திடீரென்று மட்டன் சாப்பிடுவதை நிறுத்தியது ஏன் என்பது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அது வருமாறு: நான் மட்டன் சாப்பிட்டு நான்கு வருடங்களாகி விட்டது. அதை தடுத்து நிறுத்த ஒரு சம்பவம் மிகப்பெரிய காரணமாக இருந்தது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ‘கார்த்திகேயா 2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்தில், நிறைய ஆடுகளை வளர்க்கும் ஒரு பட்டி இருந்தது.

படப்பிடிப்பு இடைவெளியில் அங்கிருந்த ஆடுகளுடன் நான் சந்தோஷமாக விளையாடினேன். ஒருநாள் எங்களுக்கு படப்பிடிப்பில் மட்டன் பிரியாணி, குழம்பு பரிமாறப்பட்டது. அன்று மாலை எனது உதவியாளர் மூலம், அன்று மதியம் எங்களுக்கு பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணி, நான் எந்த ஆட்டுடன் விளையாடிக் கொண்டிருந்தேனோ, அதை வெட்டி உணவாக்கி இருக்கின்றனர் என்ற விஷயம் தெரிந்தது. இத்தகவலை அறிந்தவுடன், அன்று முழுவதும் என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அன்று முதல் மட்டன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதற்கு பிறகு என் வீட்டில் மட்டன் சாப்பிட வற்புறுத்தியபோது, இனிமேல் நான் மட்டன் சாப்பிட மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். அந்த ஆட்டை இப்போது நினைத்தாலும் அப்செட்டாகி, எனது கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.