Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஈகோ ராமன் விமர்சனம்...

பள்ளி தலைமை ஆசிரியர் ராமன் (ரோபோ சங்கர்), சரியான ஈகோ பார்ட்டி. தாயின் லட்சியத்தை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதும் சிபி புவனசந்திரனும், கல்லூரி மாணவி கீர்த்தனாவும் காதலிக்கின்றனர். தான் படிக்கும்போது இன்ஸ்பிரஷேனாக நினைத்த ரோபோ சங்கரை சிபி புவனசந்திரன் சந்திக்கும்போது, ஈகோ ராமனின் உண்மையான குணமறிந்து அதிர்கிறார். இந்நிலையில், தத்து கொடுத்த தனது மகள் கீர்த்தனாவை சிபி புவனசந்திரன் காதலிப்பதை அறிந்த ரோபோ சங்கர், என்ன முடிவு செய்கிறார் என்பது மீதி கதை.

காமெடியை தவிர்த்து, முழுநீள குணச்சித்திர கேரக்டரில் அற்புதமாக நடித்துள்ள ரோபோ சங்கர், கிளைமாக்சில் கண்கலங்க வைக்கிறார். தனது ஈகோவை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் அவரது பாடிலாங்குவேஜ் புதிது. அவரது திடீர் மறைவு பேரிழப்புதான். சிபி புவனசந்திரன், கீர்த்தனாவின் எளிய காதல் மனதை கவர்கிறது. காதலனுக்காக தந்தையிடம் போராடும் காட்சியில் கீர்த்தனா சிறப்பாக நடித்துள்ளார்.

தாய் கவிதா ரமேஷ், குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். சேரன்ராஜ், லதா, சப்பாணி முரளி ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். வறட்சியான கிராமத்து அழகை ஜினோ பாபு இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் ரெய்மன் ராட்ரிக்ஸ் கூடுதல் பலம் சேர்த்துள்ளார். ஒருவரது அர்த்தமற்ற ஈகோ குணம், அவரைச் சுற்றியுள்ளவர்களை எப்படி பாதிக்கும் என்பதை எளியமுறையில் எழுதி இயக்கியுள்ள கணேசன் நாச்சிமுத்து, அதை திரையில் விறுவிறுப்பாக சொல்ல தவறிஇருக்கிறார்.