ராதிகா மகன் சரண் சக்தியும், சுங்கத்துறையில் பணியாற்றும் பால சரவணனும் நெருங்கிய நண்பர்கள். குடும்ப கஷ்டத்தை தீர்க்க பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் சரண் சக்தி, பால சரவணின் தவறான வழிகாட்டுதலால், போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜே.டி.சக்ரவர்த்தியிடம் அடைக்கலமாகிறார். துறைமுகத்தில் சட்டவிரோதமாக சரக்குகளை கையாள்வதில் சாகசங்கள் செய்யும் சரண் சக்தி, போதைப்பொருள் கடத்தலில் சுங்கத்துறையிடம் சிக்குகிறார்.
இதையறிந்த ஜே.டி.சக்ரவர்த்தி, அவரது துபாய் கூட்டாளி லால் ஆகியோர் என்ன செய்தனர்? சரண் சக்தி தப்பித்தாரா என்பது மீதி கதை. துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகளில் கடத்தப்படும் சட்டவிரோதமான போதைப்பொருட்கள், இளைய சமுதாயத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை பகிரங்கமாக சொல்லியிருக்கும் இயக்குனரும், தயாரிப்பாளரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான டி.சமயமுரளி, கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய வரவு எனலாம்.
ஹீரோ சரண் சக்தி நடிப்பிலும், ஆக்ஷனிலும் தேறியுள்ளார். அவரது தாயாராக வரும் ராதிகா, தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். ஜே.டி.சக்ரவர்த்தி, லால் ஆகியோர் வழக்கமான வில்லன்கள். சரண் சக்தியின் காதலியாக ஸ்மேகா அருமையாக நடித்துள்ளார். பால சரவணன் குணச்சித்திர வேடமேற்று, நண்பனுக்காக கஷ்டப்படுகிறார். காளி வெங்கட், ஜாஃபர், வினோதினி வைத்தியநாதன், ‘ராஜா ராணி’ பாண்டியன், மைம் கோபி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் டேனியல் இசையும், டி.சமயமுரளியின் பின்னணி இசையும் படத்தை தாங்கி நிற்கின்றன. கவின் பாஸ்கர் ஒளிப்பதிவு, ஸ்ரீவத்சன் எடிட்டிங், தவசி ராஜ் சண்டை காட்சிகள், சிட்டி பாபு அரங்க அமைப்பு குறிப்பிடத்தக்கவை. கடத்தல் மற்றும் சுங்கத்துறை விசாரணையை நேர்த்தியாக எழுதி இயக்கி நடித்துள்ள டி.சமயமுரளி, கிளைமாக்சை மாற்றி யோசித்து, தனது ஹீரோயிசத்தை குறைத்திருந்தால், படம் கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கும்.
