Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வீங்கிய முகத்தால் தவிக்கும் நடிகை மிமி: ரசிகர்கள் அதிர்ச்சி

கொல்கத்தா: பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தி தனது முகம் வீங்கிய நிலையிலான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். வங்காளத் திரைப்பட உலகின் முன்னணி நடிகையான மிமி சக்ரவர்த்தி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.

அரசியலில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று கூறி தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். முன்னதாக 2022ம் ஆண்டிலும் ராஜினாமா செய்ய முயன்றபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதனை நிராகரித்திருந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகிய மிமி சக்ரவர்த்தி தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை மிமி சக்ரவர்த்தி தனது ஒரு பக்க கன்னம் மற்றும் உதடுகள் வீங்கிய கோலத்தில் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். கடுமையான பல் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல் பிடுங்கப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக விளக்கம் அளித்த அவர், ‘ஒரு பல் எடுக்கப்பட்டு விட்டது; கன்னத்தில் வீக்கம், உதட்டில் காயம் மற்றும் சில தையல்களுடன் உள்ளேன்;

கேமராவுக்கு பின்னால் எந்தவித ஒப்பனையும் இல்லாத, ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கை இது; இணையத்தில் எப்போதும் பளபளப்பாக தோன்றுவதை விட, உண்மையான முகத்தை அப்படியே வெளிப்படுத்துவதே தைரியமானது’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள், அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.