ஐதராபாத்: அறிமுக இயக்குனர் பிக்சு கோயகுரா புதுமுக நடிகர்களை வைத்து ‘ஹூசாரு பிட்டலு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அன்ஷ், வாசவி கணேசன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். சரண் அர்ஜுன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘டொங்க டொங்க’ என்ற பாடல் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றது. வரும் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்த்தில் சமீபத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியின் போது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள புட்டா பானு என்ற நடிகர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தன்னைத்தானே கன்னத்தில் பலமுறை அறைந்து கொண்டார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு புட்டா பானு பேசுகையில், ‘சினிமாவில் நுழைவதற்காக கடந்த 8 ஆண்டுகளாக நான் எதிர்கொண்ட கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை நினைவு கூர்ந்தேன்.
எனது போராட்டங்கள் இன்று என் கனவை சாத்தியமாக்கி இருக்கிறது. பெரிய திரையில் என்னை நானே பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது கனவா இல்லை நிஜமா என என்னை நானே கிள்ளி பார்ப்பதற்கு பதிலாக என் கன்னத்தில் அறைந்து கொண்டேன்’ என்று கண்ணீர் மல்க பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
