Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படத்தின் தலைப்பு, ரிலீஸ் தேதி மாறலாம்: திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு புது கெடுபிடி

புதுடெல்லி: ஒன்றிய திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு), வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு திரைப்பட சான்றிதழ் பெறுவது தொடர்பாக சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விவரம்: திரைப்படங்கள் அவற்றின் தலைப்புகள், பெயர்ப் பட்டியல்கள் (credits), துணைத்தலைப்புகள் (subtitles), பின்னணி இசை, ஒலி கலவை மற்றும் தேவையான பிற அனைத்து கூறுகளுடன் முழுமையான இறுதி வடிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அல்லது பதிவின்போது குறிப்பிடப்படும் தலைப்பு தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படாது. தணிக்கைக் குழு அந்த தலைப்பை மறுபரிசீலனை செய்யவும், மாற்றியமைக்கவும் முழு அதிகாரம் கொண்டுள்ளது. தற்காலிக கிராபிக்ஸ், மாதிரி காட்சிகள் (placeholder visuals), தற்காலிக பின்னணி இசை (scratch scores) அல்லது குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அணுகல் வசதிகள் (accessibility features) இல்லாத திரைப்படங்களின் விண்ணப்பங்கள் தாமதங்களைச் சந்திக்க நேரிடலாம் அல்லது திருப்பி அனுப்பப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.

திரைப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதை காரணம்காட்டி, சான்றிதழ் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த முடியாது. தயாரிப்பாளர்கள் தணிக்கை வாரியம் வகுத்துள்ள வழக்கமான நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.

திரைப்படத்தை ஆய்வு செய்வதற்கும், குழுவின் பரிசீலனைக்கும் மற்றும் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கும் போதிய கால அவகாசம் இருக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் தங்களது வெளியீட்டுத் திட்டங்களை கவனமாகத் திட்டமிட வேண்டும். மேலும், திரைப்பட சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன் படம் அனைத்து தொழில்நுட்பப் பணிகளும் முடிந்து முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.