சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'புருஷன்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தமன்னா மற்றும் யோகிபாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை அவ்னி சினீமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்து வருகின்றன. ஆக்ஷன் கலந்த காமெடி படமான இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டு வந்தன.
அப்போது நடந்த பரபரப்பான சண்டைக் காட்சியில் பங்கேற்றபோது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் முழுமையாகக் குணமடைய மூன்று வாரங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. விரைவில் நலம் பெற்று மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
