சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜாவின் குழுவில் இடம்பெற்றிருந்த பிரபல கிடார் இசைக்கலைஞர் எஸ்.சதானந்தம் (சதா மாஸ்டர்), நேற்று அதிகாலை தனது 79வது வயதில் மரணம் அடைந்தார். கடந்த 1947 செப்டம்பர் 30ம் தேதி பிறந்த அவர், முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இளையராஜாவின் இசைக்குழுவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மை கிடார் இசைக்கலைஞராக பணியாற்றிய அவர், இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமான ‘அன்னக்கிளி’ என்ற படத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு கிதார் வாசித்துள்ளார். நைலான் கிதார், ஸ்டீல் கிதார், எலக்ட்ரிக் கிதார் உள்பட அனைத்து வகை கிதார்களிலும் திறமையை நிரூபித்திருந்த அவர் கீபோர்டு, வைப்ராஃபோன் போன்ற இசைக்கருவிகளையும் வாசித்தார். அவரது மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
