புதுடெல்லி: திகார் சிறையில் இருந்தபடி பிரபல தொழிலதிபர்களின் குடும்பத்தினரை மிரட்டி, ரூ.200 கோடி பறித்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரின் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதில் இடைத்தரகர் பிங்கி இரானி மூலம் சுகேஷ் சந்திரசேகர் அளித்த சொகுசு பிஎம்டபிள்யூ கார் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பரிசுகளை பெற்றதாக, பாலிவுட் நடிகை நோரா பதேஹி மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் 3வது துணை குற்றப்பத்திரிகையில் அரசு தரப்பு 3வது சாட்சியாக சேர்க்கப்பட்ட நோரா பதேஹி, நாளை (நவம்பர் 2) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று, கூடுதல் அமர்வு நீதிபதி கஹன்தீப் சிங் சம்மன் பிறப்பித்துள்ளார்.
இந்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘தி ராயல்ஸ்’ என்ற புதிய வெப்தொடருக்கான படப்பிடிப்பில் இருந்த நோரா பதேஹி, தனது பணியை உடனடியாக ரத்து செய்துவிட்டு, நள்ளிரவில் விமானம் மூலம் மும்பை சென்றடைந்தார்.
