Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜி.டி.என் விமர்சனம்...

அதிகமாக படிக்கவில்லை என்றாலும், தனது நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளின் மூலம் உலக அரங்கையே மிரள வைத்தவர், மறைந்த ஜி.டி.நாயுடு. பிரிட்டீஷ் அரசு, அவர் தொழில் வரி கட்டாதவர் என்று சொல்லி சதி செய்து, தேசத்துரோகி என்று முத்திரை குத்தியது. எனினும், அனைத்து சோதனைகளையும் வென்று சாதனைகள் படைத்த ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கை உள்ளபடியே வழங்கியுள்ளது படக்குழு.

கவனம் சிதறினால் ஆவணப்பட சாயல் வந்துவிடும் என்ற விபரீதத்தை புரிந்து, ஒவ்வொரு கேரக்டருக்கும் பிரபலமான திரை முகங்களை தேர்வு செய்தவருக்கும், அவர்களை திறம்பட நடிக்க வைத்த இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமாருக்கும் பாராட்டுகள். ஜி.டி.நாயுடுவை 100 சதவீதம் உள்வாங்கி மேன்மையான நடிப்பை வழங்கிய மாதவன், இந்தியா கொண்டாட மறந்த கண்டுபிடிப்பாளருக்கு தனது இயல்பான மேனரிசங்களின் மூலம் பெருமை சேர்த்துள்ளார்.

முதல் மனைவியாக நடித்த பிரியாமணி, இரண்டாவது மனைவி துஷாரா விஜயனும் கச்சிதம். இளம் வயது ஜி.டி.நாயுடுவாக டிஜே அருணாசலம், அவரது மனைவியாக ஷீலா இயல்பாக நடித்துள்ளனர். ஜி.டி.நாயுடுவை வரி கட்ட வைக்க போராடும் டெரர் அதிகாரி ஜெயராம், அதை முறியடிக்கும் சத்யராஜின் கேரக்டர்கள் காலம் கடந்து நிற்கும். முக்கிய வேடங்களில் தம்பி ராமய்யா, அதிதி பாலன் நடித்துள்ளனர்.

கருணாகரன் இப்படத்தில் புது அவதாரம் எடுத்திருக்கிறார். கதையின் திடீர் திருப்பங்களுக்கு அவர் உதவுகிறார். தொடர்ந்து நல்ல வேடங்கள் கிடைத்தால் தனது திறமைகளை அவர் இதுபோல் வெளிப்படுத்துவது உறுதி. அரவிந்த் கமலநாதனின் கேமரா. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, படத்தை தாங்கும் வலுவான தூணாக இருக்கிறது. ஜி.டி.நாயுடுவின் சாதனைகளை கொண்டாட மறந்தது ஏன் தமிழா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது படம்.