Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கய்ப் 2025 விருதுகளை அள்ளிய பைசன்

சென்னை: கய்ப் (Cinema At It’s Best) விருது விழா சென்னையில் நடைபெற்றது. திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு 2018ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 2025ல் வெளியான துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’, சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’, புதுமுகங்களின் ‘பேட் கேர்ள்’ உள்ளிட்ட படங்கள் விருதுகளை குவித்தன. சிறந்த படமாக அபிஷன் ஜீவிந்த் இயக்கிய ‘டூரிஸ்ட் பேமிலி’ தேர்வானது.

சிறந்த இயக்குனராக வர்ஷா பரத், ‘பேட் கேர்ள்’ படத்துக்காக விருது பெற்றார். சிறந்த ஒரிஜினல் பாடலாக ‘பைசன்’ படத்தில் வரும் ‘தீக்கொளுத்தி’ பாடலுக்கு விருது கிடைத்தது. இதே பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றார். ஆடை வடிவமைப்புக்கான விருதும் ‘பைசன்’ படத்துக்காக ஏகன் ஏகாம்பரம் பெற்றார். சிறந்த நடனத்துக்காக ஷெரீப், ரெட்ரோவில் வரும் கனிமா பாடலுக்கு விருது வாங்கினார். சிறந்த நடிகையாக ‘அங்கம்மாள்’ படத்தில் நடித்த கீதா கைலாசம் பெற்றார்.

சிறந்த நடிகராக அப்துல் ரஃபே ‘நாங்கள்’ படத்துக்கு தேர்வானார். சிறந்த துணை நடிகை விருதை ‘காதல் என்பது பொதுவுடமை’ படத்திற்காக ரோகிணி பெற்றார். சிறந்த திரைக்கதைக்கு அருண்குமார் ‘வீர தீர சூரன்’ படத்துக்காக தேர்வானார். பிரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, இளவரசர் ஆண்டர்சன் ஆகியோர் ‘பேட் கேர்ள்’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டனர். விருது ஒருங்கிணைப்பாளர் வினோத் ஜெயராமன் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.