Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கடுமையாக விமர்சிக்கப்படும் ‘கருப்பு’ கிராபிக்ஸ்

நடிகர் ஆர்ஜே பாலாஜி எழுதி இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியான படம் `கருப்பு’. திரையரங்குகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பற்றிய கடுமையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆர்ஜே பாலாஜி, ‘ஒரு Head Replacement ஷாட் இருக்கிறது என்றால், அதை மிகச்சரியாக உருவாக்க 8 அல்லது 10 மாதங்கள் தேவைப்படும். மேலும், அதை உருவாக்கும் நிறுவனத்துக்கு 8 அல்லது 10 மாதங்களுக்கு முன்பே கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் சொன்ன நேரத்துக்குள் எங்களால் பணத்தை கொடுக்க முடியவில்லை.

அதேவேளையில், அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கவும் முடியாது. ஏனெனில், அவை கதைக்குள் இருக்கின்றன. இப்படத்தில் சிங்கம் காட்சிகள் இருக்கிறது என்றால், அதை எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு குறைவாகவே பயன்படுத்தி படத்தில் சேர்த்து இருக்கிறோம். தியேட்டரில் இதை ஒரு பெரிய குறையாக சொல்லவில்லை. ஆனால், ஓடிடி தளத்தில் வெளியான பிறகு சொல்கிறார்கள் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். எங்களால் சரிவர செய்ய முடியவில்லை. எங்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தது.

அதற்காக, அதை யாரும் சுட்டிக்காட்டவே கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்க கூடாது. ஏதாவது தவறாக இருந்தால் மக்கள் திட்டத்தான் செய்வார்கள். ஓடிடி தளத்துக்கு வந்த பிறகு குறைகளாக சொல்லப்படுவது இதுபோன்ற சில விஷயங்கள்தான். மற்ற விஷயங்களை பற்றி ரசிகர்களும், மக்களும் பாராட்டுகிறார்கள் என்கிறபோது, இதுபோன்ற குறைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதனால்தான் இதெல்லாம் நடக்கவில்லை என்று காரணம் சொல்ல நான் விரும்பவில்லை’ என்றார்.