Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இனி தொடர்ந்து ஹீரோதானா? செல்வராகவன் பேட்டி

சென்னை: ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் முதன்முறையாக நாயகனாக நடித்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இப்படத்தில் குஷி ரவி கதாநாயகியாகவும், மைம் கோபி, கௌசல்யா, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். வியம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ் தயாரித்துள்ளார். படம் குறித்து செல்வராகவன் அளித்த பேட்டி: ஒரு கதையை தேர்வு செய்யும்போது, குறிப்பிட்ட காட்சிகள் என்னை ஈர்க்க வேண்டும். ரசிகர்களுக்கும் அது பிடிக்க வேண்டும் என பார்ப்பேன். அப்படித்தான் இந்த படத்தையும் தேர்வு செய்தேன். கதைதான் எனக்கு முதலில் பிடிக்க வேண்டும். கதையின் நாயகனாக என்னை நடிக்கச் சொல்லி அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் படத்தில் நடிக்க வைத்தார்.

அதேபோல்தான் டென்னிஸ் மஞ்சுநாத்தும் இதில் நடிக்க கேட்டார். இந்த படம் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து ஹீரோ கேரக்டர்கள் வந்தால் நடிப்பீர்களா என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. காரணம், நான் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. வாழ்க்கையை அதன்போக்கில் சென்று வாழ்கிறேன். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். சொர்க்க வாசல் படக் கதையெல்லாம் நான் விரும்பி பார்த்த ஒன்று. அந்த படத்தை நான் செய்திருக்கலாமே என்று கூட யோசித்தேன் என்றார். இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்ற ஒரு உண்மை சம்பவ பின்னணியில் மனிதன் தெய்வமாகலாம் கதை எழுதியுள்ளேன். படத்தில் அரசியலும் இருக்கும். அதையும் விட எமோஷனல் அதிகம் இருக்கும்’’ என்றார்.