கணவரை கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய படவுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் தமிழில் வெளியான ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, இந்தியில் வெளியான ‘பேபி ஜான்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து அவரது நடிப்பில் உருவான ‘கண்ணிவெடி’ என்ற தமிழ் படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. மேலும், ‘அக்கா’ என்ற வெப்சீரிஸில் நடித்துள்ள அவர், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், தன்னிடம் மறைந்திருக்கும் விநோத பழக்கம் குறித்தும், அதற்கு தனது கணவர் ஆண்டனி தட்டிலின் ரியாக்ஷன் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘விமானத்தில் நானும், எனது கணவரும் பயணம் செய்யும்போது, திடீரென்று நான் என்னிடம் பேசிக் கொண்டிருப்பேன். உடனே என் கணவர் அதிர்ச்சியுடன் என்னை ஒருமாதிரியாக பார்த்து, ‘யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்பார். அதற்கு நான் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துவிடுவேன். அவரோ எதுவும் சொல்ல முடியாமல் லேசாக கலங்குவார். ஒரு சீனில் இப்படி நடிக்கலாமா? அப்படி நடிக்கலாமா என்று யோசித்து பேசிக் கொண்டிருப்பேன். அதோடு, கடந்த சில வருடங்களாக ஒரு கதை எழுதி வருகிறேன். அதிலும் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. விரைவில் என்னை திரைப்பட இயக்குனராக பார்க்கலாம்’ என்றார். ஏற்கனவே அவர் ஒரு கதையை இயக்குனர் லிங்குசாமியிடம் சொல்லியிருக்கிறார். அது மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும், கீர்த்தி சுரேஷிடம் இருந்து இப்படியொரு புதுமையான கதையை தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் லிங்குசாமி ஆச்சரியப்பட்டார்.
