Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காப்பீடை அறிமுகப்படுத்திய அல்லு அர்ஜூன்

அட்லீ இயக்கத்தில் ‘ராக்கா’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான தனது ரசிகர் மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட அளவு நேரமும், ஆற்றலும் இருக்கிறது. உங்களை பேட்டரியாக நினைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் 100 சதவீத ஆற்றலுடன் எழுகிறீர்கள். நேரம் கடந்தவுடன் ஆற்றல் குறைய தொடங்குகிறது. 100 சதவீத ஆற்றலை எதில் முதலீடு செய்கிறீர்கள் என்பதே எனது கேள்வி. ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலோ, ட்ரோல் செய்வதிலோ, அவர்களை பற்றி தாறுமாறாக பேசுவதிலோ நேரத்தை வீணடிக்காதீர்கள்.

பிடிக்காத விஷயத்துக்காக உங்கள் ஆற்றலில் ஒரு சதவீதத்தை கூட செலவிடாதீர்கள். 100 ரூபாய் இருந்தால், உங்களுக்கு தேவையில்லாத விஷயத்துக்காக அதை செலவிடுவீர்களா? உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத விஷயங்களுக்காக ஏன் நேரத்தையும், ஆற்றலையும் செலவிட வேண்டும்? அதற்கு பதிலாக, உங்களுக்கு பிடித்த விஷயங்களில் அந்த ஆற்றலை செலவிடுங்கள். மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை மேற்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் விரும்பும் ஒருவரது வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் நிலையிலும் கூட, குறைந்தபட்சம் உங்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்துக்காகவே உங்கள் ஆற்றலை செலவிடுகிறீர்கள்’ என்றார். ஐதராபாத்தில் நடந்த இந்த சந்திப்பில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் சிறப்பம்சமாக, உறுப்பினர்களுக்கு காப்பீடு திட்டத்தை அல்லு அர்ஜூன் அறிமுகம் செய்தார். ஏதாவது விபத்து ஏற்பட்டால், மாநில குழு உறுப்பினர்கள் ரூ.5 லட்சம் வரையிலும், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரூ.3 லட்சம் வரையிலும் இந்த காப்பீடை பயன்படுத்திக் கொள்ளலாம்.