மனைவி பிரியா பவானி சங்கர், 8 வயது மகள் நட்சத்திராவுடன் விவசாயி ரவி தேஜா எளிய வாழ்க்கை நடத்தி வருகிறார். மகள் என்றால் அவருக்கு உயிர். ஊரிலுள்ள பெண்களை மதித்து, அவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவார். ஆனால், எப்போதுமே குடித்தபடி முரட்டுத்தனமாக சண்டை போடும் அவர், மகளின் நலனுக்காக 41 நாட்கள் ஐயப்ப விரதம் இருந்து, இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை செல்வார்.
இந்நிலையில், சில பெண்களிடம் தவறு செய்தவர்களை தட்டிக்கேட்கும் ரவி தேஜா, அஜய் கோஷின் மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். அப்போது மாணவிகள் சிலர் மர்மமான முறையில் உயிரிழக்க, அதுபற்றி விசாரிக்கும் ரவி தேஜாவின் வாழ்க்கை திசை மாறுகிறது. அது என்ன என்பது மீதி கதை. ரவி தேஜாவுக்கு ‘கம்பேக்’ படமாக ‘இருமுடி கட்டு’ அமைந்துள்ளது. ஜனரஞ்சக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கணவரை அன்புடன் கண்டிக்கும் பிரியா பவானி சங்கரை அனைவருக்கும் பிடிக்கும். அவ்வளவு சாந்தமாக நடித்து, கேரக்டரின் மூலம் காந்தமாக இழுத்துள்ளார். இன்னொரு ஹீரோ பேபி நட்சத்திரா. அவரது இயல்பான பேச்சும், நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது. எது நடந்தாலும் அதை அப்படியே அப்பாவிடம் ஒப்புவிக்கும் கேரக்டரின் தன்மை உருக வைக்கிறது. சாய்குமாரா இப்படி என்று கேட்க வைத்ததே அவரது சிறந்த நடிப்புக்கான சாட்சி.
வில்லியாக சுவாசிகா அசத்தியுள்ளார். மற்றும் அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ராஜ்குமார் காசி ரெட்டி ஆகியோர், அவரவர் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் ஐயப்பன் பாடல்கள் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. அப்பா, மகள் சென்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கதைக்கேற்ப அழுத்தமான பின்னணி இசையை வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, எடிட்டர் பிரவீன் புடி, ஸ்டண்ட் இயக்குனர்கள் அனல் அரசு, ரியல் சதீஷ், தமிழ்ப் பதிப்புக்கு வசனம் எழுதிய விஜய் பாலாஜி, விஜயகுமார் ஆகியோரின் பணி குறிப்பிடத்தக்கது. பக்தியும், பாசமும் கலந்த கதையில் லாஜிக் குறைபாடுகள் இருக்கின்றன. காவல்துறை இருக்கிறதா என்று கேள்வி கேட்க வைத்த இயக்குனர் சிவா நிர்வானா, ரவிதேஜா ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியுள்ளார்.
