Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெயிலர் 2 விமர்சனம்...

2023ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனான ரஜினிகாந்த், சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த விநாயகனை கொல்கிறார். அவருடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கு துரோகம் செய்யும் போலீஸ் அதிகாரியான தனது மகன் வசந்த் ரவியையும் கொல்கிறார். தனக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் இருப்பதாகவும் அவர்கள் உன்னைத் தேடி வருவார்கள் என்றும் விநாயகன் சாவதற்கு முன் சொல்லி இருப்பார்.

இப்போது இரண்டாம் பாகத்தில் அதேபோல் சுராஜ் வெஞ்சரமூடு, விநாயகனுக்கு பதிலாக அந்த இடத்துக்கு வருகிறார். அவருக்கும் மேல் இருக்கும் ‘பாஸ்’ தான் எஸ்.ஜே.சூர்யா. கோவாவில் அப்பா மிதுன் சக்ரவர்த்தி, சகோதரி வித்யா பாலன் மற்றும் 2 சகோதரர்களுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவர்களின் சாம்ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட ரஜினிகாந்த் புறப்படுகிறார். அதன் பிறகு நடப்பதே அதிரி புதிரி விளையாட்டு.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் பார்த்த அதே வேகம், விவேகம், ஸ்டைல் என படம் முழுக்கவே தனது ஆர்ப்பரிக்கும் அவதாரத்தால் அப்ளாஸ் அள்ளுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகாலமாக சினிமாவில் கோலோச்சி இருப்பதற்கும் பல மூத்த நடிகர்கள் முயற்சித்தும் எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தும் நம்பர் 1 அரியாசனத்தில் ரஜினி இருப்பதற்கான காரணத்தை அறிய வேண்டுமென்றால் இந்த படத்தைப் பார்த்தால் போதும். மனிதர் அதகளம் செய்திருக்கிறார்.

கோவையில் ஒரு டிபன் கடையில் கர்ப்பிணியை சித்ரவதை செய்யும்போது டைகர் முத்துவேல் பாண்டியனாக அவர் மாறும் இடம் மாஸ் என்றால், அவரை அவரது வீட்டிலேயே எஸ்.ஜே.சூர்யா தாக்கும்போது, அப்போது நடக்கும் சம்பவத்தால் மனதால் ரஜினி உடைந்துபோவது கிளாஸ். வீட்டு குழாயில் தண்ணீர் மண் கலந்து வருவதாக புகார் செய்ய மாநகராட்சி ஆபீசரிடம் செல்லும்போது அவர் காட்டும் பவ்யம், அங்கு ஆபீசரான பகவதி பெருமாள், உதாசினப்படுத்த முகம் தொங்கியபடி செல்லும் பாடிலாங்குவேஜ், பிறகு பகவதி பெருமாளை அக்கம் பக்கத்தினர் முன்பே லெஃப்ட் ரைட் எடுக்கும் ஆக்ரோஷம் என ஒருபுறம் பின்னியெடுக்கிறார் சூப்பர் ஸ்டார்.

மறுபுறம் சுராஜ் வெஞ்சரமூடு இடத்துக்கு சென்றதும் அங்கு கார் டிரைவாக ஒதுங்கி நிற்பது, நமோ நாராயணாவிடம் அடியாள் போல் வேலை பார்ப்பது, யோகி பாபுவை வைத்து நமோ நாராயணாவை சிலை கடத்தல் கும்பலிடம் சிக்க வைப்பது என காமெடி ஏரியாவில் இன்றைக்கும் நானே ராஜா என காட்டியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரஜினிக்கு ஏற்ற ஜோடியாக இந்த பாகத்திலும் கவர்கிறார். மிர்னா, கணவனை இழந்த சோகத்தால் அனுதாபம் அள்ளுகிறார். யோகி பாபு வரும் காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் சிரிப்பலை அதிர, மறுபுறம் நமோ நாராயணா காமெடி சரவெடி கொளுத்திப்போடுகிறார்.

வில்லியாக வரும் வித்யா பாலன், தெனாவட்டான நடிப்பில் மிளிர்கிறார். சுராஜ் வெஞ்சரமூடு அடிப்பொலி வில்லத்தனம் காட்டுகிறார். இரண்டாம் பாதியிலிருந்து என்ட்ரி தரும் எஸ்.ஜே.சூர்யா, ரஜினியின் முத்துவேல் பாண்டியன் இமேஜுக்கு ஏற்ற வில்லனாக டஃப் கொடுக்கிறார். முதல் பாகத்தில் வந்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் இந்த பாகத்தில் முக்கியமான காட்சியில் என்ட்ரி தரும்போது தியேட்டரில் ரசிகர்கள் வேறலெவல் வைபுக்கு செல்கிறார்கள்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ஃபயர் என்றால், பின்னணி இசை டபுள் ஃபயர். ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட ‘அல்லபோலேலோ’, ‘பிந்தாஸ்’, ‘ஒன் சன் ஒன் மூன்’ உள்பட பாடல்கள் அனைத்துமே அமர்க்களம். பின்னணி இசையின்போது ஒலிக்கும் தீம் பாடல் தீயாய் இருக்கிறது. அதுவும் அந்த இன்டர்வல்பிளாக் காட்சியும் அதை இயக்குனர் நெல்சன் படமாக்கிய விதமும் அதில் ரஜினியின் கரிஷ்மாவும் ஒன்று சேரும்போது அனிருத் செய்திருக்கும் மேஜிக் அலாதியானது.

விஜய் கார்த்திக் கண்ணன் தனது ஒளிப்பதிவால் படத்துக்கு கொடுத்திருக்கும் உழைப்பு காலத்துக்கும் பேசப்படும். ஆர்.நிர்மலின் எடிட்டிங், கனக்கச்சிதமாக செயல்பட்டிருக்கிறது. டி.ஆர்.கே.கிரணின் கலை இயக்கம், சேத்தன் டிசோசாவின் ஸ்டன்ட் உள்பட டெக்னீஷியன்கள் தங்களது டிபார்ட்மென்ட்டில் தி பெஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.

ஹியூமரை படத்தில் எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்த ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் மேக்கர்தான் நெல்சன். முதல் பாதி முழுக்க அவர் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் காமெடியால் ரசிகர்களை ஆக்கிரமிக்கிறார். இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மோடில் படத்துக்கு வேகம் கூட்டுகிறார். ஒட்டுமொத்தமாக ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி மீண்டும் ஜெயித்திருக்கிறது, படு ஜோராக.