ஐதராபாத்: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்பட பலரது நடிப்பில் கடந்த 2024ல் வெளியான படம் ‘தேவரா: பார்ட் 1’. இதில் இடம்பெற்ற ‘சுட்டமல்லி’ என்ற பாடலில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூரின் நடனம் பல்வேறு தரப்பினரை கவர்ந்தது. இப்பாடலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக சித்திரித்து மோசமான ஆபாச காட்சிகளை உருவாக்கி சிலர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் வெளியிட்ட பதிவில், ‘பெண்களை தாயாகவும் தெய்வமாகவும் மதிக்கும் இந்த நாட்டில், ‘மாத்ருதேவோ பவ’ என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. ஆனால், சிலர் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு பெண்ணை மிகவும் கேவலமான முறையில் அவமதிக்கும் வகையில் வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த செயல் வெட்கக்கேடானது.
இந்த ஏஐ வீடியோவின் பின்னணியில் இருப்பவர்கள், யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்போகிறேன். இன்று வேறு ஒருவருக்கு நடக்கும் இது நாளை உங்கள் தாய், சகோதரி, மனைவி அல்லது மகளுக்கோ நடக்கலாம். ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு எதிராக அனைத்து மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுத்து, கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும்’ என்று வலியுறுத்தி தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
