ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ என்ற படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் கே.கபூர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசை அமைத்துள்ளார். வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது தனது காதல் மனைவி ஜோதிகா குறித்து உருக்கமாக பேசிய சூர்யா, ‘அப்பா, அம்மா, தம்பி, தங்கை அமைந்ததை என்னால் முடிவு செய்ய முடியாது. அந்த வீட்டில் பிறந்தேன், அவர்களுடன் இருந்தேன். ஆனால், மனைவி அமைவதெல்லாம் என்று சொல்வார்களே, என்னை வழிநடத்துவது எனது மனைவிதான். நிறைய தவறுகளை செய்து கீழே விழுந்திருக்கிறேன். அதைெயல்லாம் சுட்டிக்காட்டி என்னை சரி செய்ததாக இருக்கட்டும், நான் சரியாக இருப்பதாகட்டும், எல்லா நேரமும் என் கையை பிடித்து அழைத்து செல்வது எனது ஜோ தான்.
அவர் மிகச்சிறந்த மனைவி, அருமையான தாய், நல்ல தோழி என்று, நான் இதுபோன்ற ஒரு ஆளாக இருப்பதற்கான எல்லா விஷயங்களும் எனது மனைவியால்தான் நடந்தது’ என்று உருகினார். அதைக்கேட்டு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா கண்கலங்கினார். பிறகு கார்த்தி பேசியபோது, ‘சமீபத்தில் ஸ்காட்லாந்து நாட்டில் அண்ணனுக்கும், அண்ணிக்கும் மீண்டும் திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது எனக்கும், எனது மனைவி ரஞ்சனிக்கும் மிகப்பெரிய சண்டை வந்துவிட்டது. அங்கு வந்திருந்த பல ஜோடிகளுக்கும் இதுதான் நிலமை. இருவரும் ஓவராக காதலிக்கிறார்கள். இவர்கள் எப்படி காதலிக்கிறார்கள் பார் என்று, பல குடும்பங்களில் சரியாக உணவுகூட கிடைப்பது இல்லை’ என்று, கூட்டத்தினரை சிரிக்க வைத்தார்.
