Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கலன் விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் வெட்டுடையா காளி (தீபா சங்கர்), தனது கணவனை இழந்த நிலையிலும், கஷ்டப்பட்டு தனது மகன் வேங்கையை (யாசர்) படிக்க வைக்கிறார். தீபா சங்கருக்கு அவரது தம்பி அப்புக்குட்டி தூணாக நின்று பலம் சேர்க்கிறார். அவருக்கு அக்கா மகன் வேங்கை என்றால் உயிர். இந்நிலையில், வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் சம்பத் ராம், காயத்ரி கூட்டத்தால் பெரிய பிரச்னை ஏற்படுகிறது. அதன் பிறகு நடப்பதே மீதி கதை.

வெட்டுடையா காளியாக ஆவேசமாகவும், பாசமிகு தாயாகவும் வித்தியாசம் காட்டி சிறப்பாக நடித்துள்ள தீபா சங்கர், சில காட்சிகளில் மிகையாக நடித்ததை இயக்குனர் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அக்கா மகனுக்காக உயிரையே கொடுக்க முற்படும் அப்புக்குட்டி, உணர்வுப்பூர்வமான நடிப்பில் மனதில் பதிகிறார். அதுபோல், யாசர் கேரக்டரும் ஆழமாகப் பதிகிறது. போதைப்பொருள் சாம்ராஜ்ஜிய அதிபதிகள் சம்பத் ராமும், காயத்ரியும் போட்டி போட்டு வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், வழக்கத்துக்கு மாறாக நடித்திருக்கிறார். போலீஸ் மணிமாறன் உள்பட மற்ற நடிகர், நடிகைகள் தென்மாவட்ட மக்களை அப்படியே பிரதிபலித்துள்ளனர்.

ஜெயக்குமார், ஜேகே ஆகியோரின் கேமரா, தென்மாவட்ட மக்களின் வாழ்வியலை ேநர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளது. திருவிழா காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. ஜெர்சன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஆக்ரோஷமாக இருக்கின்றன. வீரமுருகன் எழுதி இயக்கியுள்ளார். சமூகப் பிரச்னையை கவனத்துடன் கையாண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளார். சாதி ரீதியான குறியீடுகள் இருந்தாலும், ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். வன்முறைக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.