Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கந்ததகுடி (கன்னடம்)

இளம் வயதிலேயே திடீர் மரணம் அடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் இது. அவரது மனைவி அஸ்வினி தயாரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட பலரது பாராட்டுகளைப் பெற்ற இப்படம், கடந்த அக்டோபரில் திரைக்கு வந்தது. தற்போது அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஒரு டிராவல் டாக்குமெண்டரி. புனித் ராஜ்குமார் இயற்கையின் மீதும், காடுகளின் மீதும் தீவிர காதல் கொண்டவர். அவர் தனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான அமோகாவர்ஷாவுடன் கர்நாடகாவிலுள்ள காடு முழுவதும் பயணித்து, அதன் அருமை, பெருமைகளை காட்சி அனுபவங்களுடன் விவரித்துள்ளது. குறிப்பாக, நெட்ராணி பகுதியில் புனித் ராஜ்குமார் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்யும் காட்சிகள் பிரமிப்பு ஏற்படுத்துகிறது.

அடர்ந்த காடான மலைநாடு, பாறைகள் நிறைந்த டெக்கான், வெளியுலக தொடர்பில்லாமல் வாழும் கன்னடர்கள் நிறைந்த காளி என்று, அவரது பயணம் வியக்க வைக்கிறது. காட்டுப்புலியை நேருக்கு நேர் சந்திக்கிறார். 25 அடி நீளமுள்ள ராட்சத நாகப்பாம்பை பிடிக்க உதவுகிறார். யானைகளுடன் கொஞ்சிக்குலவுகிறார். இப்படி பயமின்றி நிஜ ஹீரோவாகவும் தன்னை முன்னிறுத்தி இருக்கிறார், புனித் ராஜ்குமார். அவருடைய பயணம், அவரது தந்தையும், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாருமான ராஜ்குமார் பிறந்த காஜனூரில் தொடங்குகிறது. பிறந்த வீடு, ஓடிப்பிடித்து விளையாடிய 250 ஆண்டு கால ஆலமரம் ஆகியவற்றைத் தொட்டு வணங்கி பயணத்தை ஆரம்பிக்கிறார். அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும், பிரதீக் ஷெட்டியின் ஒளிப்பதிவும் ஒரு திரைப்பட அனுபவத்தைக் கொடுக்கிறது. புனித் ராஜ்குமார் காட்டை வணங்கும் இறுதிக்காட்சியில், பார்வையாளர்களும் அழுதுவிடுகிறார்கள்.