Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கருப்பு விமர்சனம்...

தனது மகள் அனகா மாயா ரவியின் ஆபரேஷனுக்காக நகைகள் மற்றும் பணத்துடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வரும் இந்திரன்ஸ், திருடர்களிடம் அனைத்தையும் பறிகொடுக்கிறார். இதனால், போலீஸ் மற்றும் கோர்ட் உதவியை நாடுகிறார். அப்போது அநீதி வழக்கறிஞர் ஆர்ஜே பாலாஜி, இந்திரன்ஸுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றுகிறார். இதனால் மனம் வெறுத்த இந்திரன்ஸ், கோர்ட் வளாகத்தில் நீதிக்காக படைக்கப்பட்ட வேட்டை கருப்பசாமியின் உடம்பில், அரைத்த மிளகாயை தேய்த்து வேண்டிக்கொள்கிறார்.

பிறகு அந்த வேட்டை கருப்பசாமி சூர்யா ரூபத்தில் வந்து எதிரிகளை பொளக்க, அநீதியின் ஆட்டம் அடங்கியதா என்பது மீதி கதை. வேட்டை கருப்பசாமி அவதாரத்தில் சூர்யா விஸ்வரூபம் எடுத்து, எதிரிகளை வதம் செய்கிறார். பல்வேறு தோற்றங்களில் வந்து ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். ஜோடி இல்லை. ஆனால், கூடவே வருகிறார் திரிஷா. வில்லத்தனத்தில் ஆர்ஜே பாலாஜி ருத்ர தாண்டவமாடி இருக்கிறார்.

இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, நீதிபதி நட்டி நட்ராஜ், சுவாசிகா, வேல.ராமமூர்த்தி, ஷிவதா நாயர், நமோ நாராயணன், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியன், தீபா சங்கர், ‘ஆடுகளம்’ நரேன், மாறன், சுப்ரீத் ரெட்டி என்று, அவரவருக்குரிய கெத்துடன் நடித்துவிட்டு செல்கின்றனர். ஆக்‌ஷன் மசாலாவுக்கு ஏற்ற ஒளிப்பதிவை ஜி.கே.விஷ்ணு வழங்கியுள்ளார். பின்னணி இசையில் சாய் அப்யங்கர் மிரட்டுகிறார்.

பாடல்களில் ஆவேசம் தெறிக்கிறது. ஆர்.கலைவாணன் எடிட்டிங் ஷார்ஃப்பாக இருந்திருக்கலாம். அருண் வெஞ்சாரமூடுவின் அரங்க அமைப்பும், விக்ரம் மோரின் ஸ்டண்ட் வடிவமைப்பும் அபாரம். தீயசக்தியை கடவுள் சக்தி எப்படி அழிக்கிறது என்பதை ஃபேண்டஸியுடன் கூடிய கமர்ஷியல் அம்சங்களுடன், முழுநீள ஆக்‌ஷன் மசாலாவாக எழுதி இயக்கிய ஆர்ஜே பாலாஜி, தனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தருவதை குறைத்திருக்க வேண்டும்.