தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சினிமாவிற்கு வந்து 48 ஆண்டுகள் ஆகியுள்ளது. கடந்த 1978ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளியான ‘பிராணம் கரீது’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தெலுங்கு படவுலகின் மெகா ஸ்டாராக உயர்ந்துள்ளார். கடந்த 22ம் தேதியுடன் ‘பிராணம் கரீது’ படம் வெளியாகி 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தனது சோஷியல் மீடியாவில் அப்படத்தின் போஸ்டருடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 1978, செப்டம்பர் 22ம் தேதி தொடங்கிய எனது சினிமா பயணம், இன்று 48 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 48 ஆண்டுகளில் நிறைய கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன். பல வெற்றிகள், பல விருதுகள், அங்கீகாரம், மரியாதைகளை பெற்றுள்ளேன். இந்த நீண்ட பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், என்னுள் இருந்த நடிகனில் இருந்து புதிய பரிணாமங்களை கண்டுபிடித்த இயக்குனர்கள், எனது சக நடிகர்கள், இரவு பகலாக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
உங்களின் கூட்டு உழைப்புதான் இன்று இந்த இடத்தை எனக்கு பெற்று தந்துள்ளது. ஆனால் இந்த வெற்றிகளை விட நீங்கள் என் மீது காட்டும் அன்புதான் பெரியது. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, என் மீது அளவில்லாத அன்பை பொழியும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
