Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்சார் போர்டின் அலட்சியத்தால் 500 திரைப்படங்களின் ஆவணங்கள் ஆன்லைனில் திருட்டு: படத்தின் கதை, வணிக ஒப்பந்தங்கள் கசிந்ததால் அதிர்ச்சி

இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC - Censor Board) இணையதளத்தில் ஏற்பட்ட பெரிய தரவு கசிவு காரணமாக 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மிக ரகசியமான ஆவணங்கள் ஆன்லைனில் திருடப்பட்டுள்ளது. இது சென்சார் போர்டின் அலட்சியத்தால் கசிந்ததாக கூறப்பட்டாலும் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டிருப்பதாகவும் ஒரு தரப்பினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து தணிக்கை வாரியத்தின் தலைவர் சசி சேகர் வேம்பதி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்காக ஒன்றிய அரசு இ-சினிபிரமாண் (e-Cinepramaan) என்ற இணையதளப் போர்ட்டலைப் பயன்படுத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டைப் பயன்படுத்தி, 2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களின் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தும் ‘இன்டர்நெட் ஆர்ச்சிவ்’ என்ற தளத்தில் பதிவேற்றப்பட்டு, பின்னர் அக்டோபர் 12 அன்று அங்கிருந்து நீக்கப்பட்டன. திரைப்படங்களின் முழுமையான வீடியோ பிரதிகள் எதுவும் கசியவில்லை. ஏனெனில் திரைப்படங்கள் தனியாகக் கையாளப்படுகின்றன. ஆனால், ரிலீஸாகாத படங்களின் கதைகள், ட்விஸ்ட்டுகள் மற்றும் தணிக்கை விவரங்கள் கசிந்திருப்பதால் படங்களின் வணிகம் மற்றும் சஸ்பென்ஸ் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தத் தரவுக் கசிவு குறித்து இந்திய கணினி அவசரநிலைப் பிரிவுக்கு (CERT-In) தகவல் தெரிவிக்கப்பட்டு, தணிக்கை வாரியப் போர்ட்டலில் விரிவான பாதுகாப்பு தணிக்கை (Security Audit) நடைபெற்று வருகிறது. மேலும், இந்த ஆவணங்களைப் பதிவேற்றிய கணக்கை முடக்கியுள்ள இன்டர்நெட் ஆர்ச்சிவ் நிறுவனம், சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளது.

கதை மற்றும் சஸ்பென்ஸ் அம்பலமானது: ஒரு படத்தின் வெற்றிக்கே அதன் சஸ்பென்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டுகள்தான் முக்கியக் காரணம். இன்னும் ரிலீஸாகாத படங்களின் முழுத் திரைக்கதையும் வசனங்களும் ஆன்லைனில் கசிந்திருப்பதால், அந்தப் படங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்து பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பாதிக்கும் எனப் படக்குழுவினர் அஞ்சுகின்றனர். இதில் பெரும்பாலும் பாலிவுட் படங்கள் இடம்பெற்றுள்ளன. சில தமிழ், தெலுங்கு படங்களும் இடம்பெற்றுள்ளன.

வணிக ஒப்பந்தங்கள் கசிந்தது : திரைப்படங்களின் விநியோக ஒப்பந்தங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமக் கட்டணங்கள் போன்ற மிக ரகசியமான வணிக விவரங்கள் இதில் வெளிப்படையாகக் கசிந்துள்ளன. எந்தெந்தப் படம் எவ்வளவு கோடிக்கு விற்கப்பட்டது என்ற வர்த்தக ரகசியங்கள் வெளியே தெரிந்தால், அது தங்களின் அடுத்தடுத்த படங்களின் பிசினஸைக் கடுமையாகப் பாதிக்கும் எனப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

‘கட் ஆர்டர்’ விவகாரம்: தணிக்கைக் குழுவினர் படத்திலிருந்து எந்தெந்தக் காட்சிகளை நீக்கச் சொன்னார்கள், எந்த வசனங்களை மியூட் செய்யச் சொன்னார்கள் என்ற விவரங்கள் வெளியே வந்துள்ளன. இது ரிலீஸுக்கு முன்பே தேவையில்லாத அரசியல் அல்லது சமூகக் கருத்து ரீதியான சர்ச்சைகளை அந்தப் படத்திற்கு உருவாக்கிவிடும் என இயக்குனர்கள் அஞ்சுகின்றனர்.

ரஷ்யா பெயரில் நடந்த சதி?

இணையத்தில் இந்த ஆவணங்களை ரகசியமாகப் பதிவேற்றிய பயனர், முன்னாள் சென்சார் போர்டு தலைவரான பிரசூன் ஜோஷியின் பெயரை ரஷ்ய மொழியில் டிஸ்ப்ளே பெயராகப் (Display Name) பயன்படுத்தியுள்ளார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ஹேக்கிங் சதி என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மத்திய அரசின் பாதுகாப்புத் தணிக்கைக்கு (Security Audit) பிறகே முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.