Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இல வீழா பூன்சிரா (மலையாளம்)

க்ரைம் த்ரில்லர் படம் என்றாலே அது மலையாளப் படம்தான் என்றாகிவிட்டது. அதை மெய்பிப்பது போன்று தியேட்டரில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு சில கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் ஆடியன்சை கட்டிப்போட்டு வைக்கும் பரபர திரைக்கதைதான் இந்த படத்தின் பலம்.

மலை உச்சியில் இருக்கிறது வயர்லஸ் போலீஸ் கேம்ப் ஒன்று. வெறும் தகரத்தினால் ஆன இந்த கேம்பில் இரண்டு போலீஸ்காரர்கள் பணியில் இருக்கிறார்கள். ஒருவர் சுபின் சாஹிர் மற்றொருவர் சுதி கோப்பா. திடீரென நாடெங்கும் பரபரக்கிறது ஒரு செய்தி. ஒரு பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல இடங்களில் வீசப்படுகிறார். அதில் ஒரு கால் இவர்களின் கேம்ப் அருகில் கிடக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர் கதை.

சுபின் சாஹிரும், சுதி கோப்பாவும் போட்டிபோட்டு நடிக்கிறார்கள். தனித்து விடப்பட்ட கேம்பில் இருக்கும் காவலர்களின் வாழ்க்கையையும் அப்படியே பதிவு செய்கிறார்கள். கால் கண்டெடுக்கப்பட்ட பிறகு ஒருவரை ஒருவர் சந்தேகிப்பதும், பயங்கொள்வதுமாய் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரி மனைவியின் கள்ள உறவு, சில நாட்கள் மட்டும் போலீஸ் கேம்பில் வந்து பணியாற்றி செல்லும் காவலர், கேம்ப் அருகே வரும் காதல் ஜோடிகள் என ஆடியன்சை கவனத்தை திசை திருப்பி யாரும் எதிர்பாராத முடிவை தந்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குனர் சாஹி கபிர். மிரட்டலான திகில் அனுபவம் தரும் படம்.