
பெற்றோர்கள் லிவிங் டு கெதர் வாழ்க்கைக்கு சம்மதிக்காததால், அவர்களிடம் இருந்து பிரிந்து வந்து தனது காதலனுடன் சேர்ந்து வாழ்கிறார். சில மாதங்களில் அவர் கர்ப்பம் அடைகிறார். இந்த கர்ப்ப காலமும், குழந்தை பிறப்பும் அவர்களுக்குள் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பது கதை. பல விருதுகளை வென்று வரவேற்பு பெற்ற ‘டூலெட்’ படத்தில் நடித்த சந்தோஷ் நம்பிராஜன் இயக்கி நடித்துள்ளார். அவரைத் தவிர மற்ற அனைவரும் சிங்கப்பூர் கலைஞர்கள்.
நான்கைந்து கேரக்டர்களை வைத்துக்கொண்டு லிவிங் டு கெதர் வாழ்க்கை சிறந்ததா? திருமண வாழ்க்கை சிறந்ததா என்று பட்டிமன்றம் நடத்தி, அதற்கு ஒரு தீர்வும் சொல்லியிருக்கிறார். அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார், சந்தோஷ் நம்பிராஜன். ஹர்மித் கவுர் நடிப்பில் தேறினாலும், வசன உச்சரிப்பில் தடுமாறுகிறார். சிங்கப்பூரை விரிவாகச் சுற்றிக் காட்டியிருக்கிறது, பிரேம் குமார் நட்சத்திரம் என்பவரின் ஒளிப்பதிவு. எம்.எஸ்.காமேஷின் இசை காதலிசத்துக்குப் பெரிதும் உதவியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ, எம்எக்ஸ் பிளேயர் ஆகிய தளங்களில் வெளியாகியுள்ளது.
