சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்றுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் ‘பிந்தாஸ்’ என்ற பாடலுக்கு தனது சிறந்த நடனத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நோரா பதேஹி. தியேட்டர்களில் அவரது பாடல் காட்சிக்கு ரசிகர்கள் உற்சாக நடனம் ஆடும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின்றன. சமீபத்தில் நோரா பதேஹி தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, ‘நான் சினிமாவுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் இப்போது எனக்கு சினிமா இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. என் சினிமா பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்களை பார்த்திருக்கிறேன். பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன். அந்த கஷ்டங்களை நினைத்தாலே எப்படி இவற்றை கடந்து வந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
பொதுவாகவே சினிமா பிரபலம் என்றாலே எளிதாக நினைத்து விடுவார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. சினிமா பயணம் மிக கடுமையானது இங்கு கடின உழைப்பும், திறமையும் இருந்தால் நிச்சயம் இலக்கை அடையலாம். மற்ற மனிதர்களை விட சினிமா பிரபலங்களுக்கு புகழும் பெயரும் வேகமாக கிடைத்து விடுகிறது. இது யாருக்குமே கிடைக்காத அதிர்ஷ்டம். அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த துறையில் பல ஜாம்பவான்கள், ஸ்டார்கள் இருந்தாலும் எனக்கென்று ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. அதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். இந்த சினிமாவில் இருப்பதையே உயர்வாகவும் என் வாழ்நாள் அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். எனக்கு புகழும், பெருமையும், பணமும் தந்து அழகு பார்க்கும் இந்த சினிமாவுக்காக எதை வேண்டுமானால் செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
