சென்னையில் மெடிக்கல் ரெஃப் ஆக இருக்கும் கிருபாகரன் (விஷால்), தனது மனைவி துஷாரா விஜயன் மற்றும் மகன், மகளுடன் நிம்மதியாக வசித்து வருகிறார். குறைந்த சம்பளம் என்றாலும், குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற ஒரு கார் வாங்குகிறார். விசாகப்பட்டினத்தை கதிகலங்க வைக்கும் மிகப்பெரிய கேங்ஸ்டர் லிங்கா (இன்னொரு விஷால்), கப்பலில் வருகிற பொருட்களை கடத்துவது தொடர்பான பஞ்சாயத்தில் பலரது பகையை சம்பாதிக்கிறார். கிருபாகரனின் காரும், லிங்காவின் கடத்தலும் எதிர்பாராமல் ஒரு புள்ளியில் சந்திக்கிறது.
அவர்களுக்கு இடையே என்ன சம்பந்தம்? நிம்மதியாக வசித்த கிருபாகரனின் குடும்பமும், லிங்காவின் சாம்ராஜ்யமும் எதிரிகளால் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ். முழுநீள கமர்ஷியல் ஆக்ஷன் கதையுடன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள விஷால், லாஜிக் பற்றி கவலைப்படவில்லை. அமைதியான கிருபாகரன், ஆக்ரோஷமான லிங்கா மற்றும் லிங்காவின் நடுத்தர வயது என்று, மூன்று கதாபாத்திரங்களிலும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். லிங்காவாக வரும் விஷாலின் சண்டைக் காட்சிகள் ஓவர்டோஸ் என்றாலும், ஜனரஞ்சக படம் என்பதால் ரசிக்க முடிகிறது.
இளையராஜாவின் ரசிகராக வரும் அவர், ‘முத்துமணி மாலை’ என்ற பாடல் ஒலிக்க எதிரிகளை பொளக்கும் காட்சி அத
களம். துஷாரா விஜயன், தம்பி ராமய்யாவுக்கு அதிக வேலையில்லை. லிங்காவின் மனைவி யாக, மீன் விற்கும் பெண்ணாக வருகிற அஞ்சலி நடிப்பிலும், பாடலிலும், சண்டைக் காட்சியிலும் அசத்தியுள்ளார். ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, சபு மோன், சபீதா ராய், ஸ்ரீலேகா ராஜேந்திரன், அபு சலீம், அர்ஜெய், பதம் குமார் ஆகியோரின் இயல்பான நடிப்பு கவனிக்க வைக்கிறது.
ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ராமானுஜம், ஜெய் கார்த்திக் ஆகியோரின் ஒளிப்பதிவு, படத்துக்கு கமர்ஷியல் முலாம் பூசியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். பின்னணி இசை ஜனரஞ்சகமாக இருக்கிறது. ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸில் நடக்கும் மோசடி கள் மற்றும் கடத்தல்களை பேச நினைத்த படம், திடீரென்று ரூட் மாறி, தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கும் ஒருவனின் கதையாகி விடுகிறது. படத்தின் நீளம் அதிகம். எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் குறைத்திருக்கலாம். இயக்குனர் ரவி அரசுவின் கதைக்கு திரைக்கதை எழுதி விஷால் இயக்கியுள்ளார். இது அறிமுக படம் என்பதால், அடுத்த படத்தில் தன்னை மேம்படுத்திக்கொள்வார் என்று நம்பலாம்.
