Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மகேஷ் பாபு படத்தில் ராமாயண காட்சிகள்

டைம் டிராவல் மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் அடிப்படையில் 1,400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘வாரணாசி’ என்ற பான்வேர்ல்ட் படத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி எழுதி இயக்குகிறார். ருத்ராவாக மகேஷ் பாபு, மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா, கும்பாவாக பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு கிளிம்ப்ஸில் ராம், ஹனுமன் இடம்பெற்ற காட்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வரும் ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், பிரேசில் நாட்டில் நடந்த சாவ் பாலோ சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய எஸ்.எஸ்.ராஜமவுலி, ‘நாங்கள் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தின் ஷூட்டிங்கை 315 நாட்களில் முடித்தோம்.

அதைவிட 6 மடங்கு பெரிய படமாக இருந்தாலும், ‘வாரணாசி’ படத்தின் ஷூட்டிங்கை 275 நாட்களிலேயே முடித்துவிட்டோம். இது எனது லட்சிய படம். அண்டார்டிகாவில் இருந்து ஆப்பிரிக்கா வரை, ராமாயண கால பயணம் மற்றும் பிரமாண்டமான கடவுள்கள் என்று பயணப்பட்டாலும், முடிவில் அதன் மையத்தில் ஒரு தந்தை, மகன் பிணைப்பையும் மற்றும் காதலர்களின் உண்மையான உணர்ச்சிகளாலும் பின்னப்பட்டுள்ளது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய எங்களின் புராணங்கள் இதுவரை திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் எனக்கு முழு திருப்தியை அளித்தது இல்லை.

இப்படத்தில் ராமாயணத்தை தழுவிய ஒரு பிரத்தியேக காட்சி இடம்பெறுகிறது. அந்த லுக்கில் மகேஷ் பாபுவை பார்த்தபோது எனக்கு மெய்சிலிர்த்தது. ராமர் காட்சியை 60 நாட்கள் படமாக்கினோம். இது விஷூவலாக மட்டுமன்றி, உணர்ச்சிப்பூர்வமாகவும் ரசிகர்களை பெரிதும் கவரும்’ என்றார். இப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாகிறது.