கொச்சி: மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பிரேமலு’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜு, தற்போது தென்னிந்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரிலுள்ள கிளைட் மலையாளி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென்று அவருக்கு காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் வலியுடன், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை சார்ந்த பிரச்னைகளும் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துவிட்ட மமிதா பைஜு, விழா அமைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில், ‘ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள ரசிகர்களை நேரில் சந்திப்பதை அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. என்னை பார்க்க ஆவலுடன் காத்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
