முகவைப்பட்டினத்தில், பாய்மர படகு போட்டியில் புறக்கணிக்கப்பட்ட முகவை மைந்தன்ஸ் அணி கேப்டன் மிதுன் ஜெய்சங்கர், எதிரணியான சுனாமி ரைடர்ஸ் கேப்டனை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அவரை கொல்ல சுஹாஸ் தனது ஆட்களை அனுப்புகிறார். தப்பித்துச் செல்லும் மிதுன் ஜெய்சங்கர், சென்னையில் நீச்சல் குளத்தில் பணியாற்றும் முகவைப்பட்டினம் சூரியிடம் அடைக்கலமாகிறார். சில காரணங்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு வந்த சூரி, மனதில் ஒரு சபதத்துடன் மிதுன் ஜெய்சங்கருடன் ஊருக்கு திரும்புகிறார்.
அதன் பிறகு நடப்பது மீதி கதை. முகவை மைந்தன்ஸ் அணிக்காக மனம் தளராமல் உயிரை பணயம் வைத்து போராடும் குணத்துடன், முற்றிலும் மாறுபட்ட சூரியின் நடிப்புக்கு விருதுகள் கொடுக்கலாம். படகு போட்டியிலும், சத்யராஜுடனான சிஷ்ய விசுவாசத்திலும், மஹிமா நம்பியாருடனான காதலிலும் அழுத்தமான தடத்தை பதிக்கிறார் சூரி, மஹிமா நம்பியாரின் காலில் விழுந்து கதறும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
டெரர் முகம் காட்டி அட்டகாசமாக நடித்துள்ள சுஹாஸ், தமிழுக்கு புதிய நல்வரவு. மஹிமா நம்பியாரா இது என ஆச்சரியப்பட வைக்கிறது அவரது தோற்றமும், எமோஷ்னலான நடிப்பும் சிறப்பு. சத்யராஜின் கெட்டப் புதிது. அவரும் தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். பல படங்களில் பார்த்த பத்மன், இதில் முக்கியமான வேடத்தில் படம் முழுக்க வந்து நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் முக்கிய இடத்தை பிடிப்பார்.
மிதுன் ஜெய்சங்கர், கிருத்திகா, ஸ்டண்ட் சிவா, பாலசரவணன், ரவீந்திர விஜய், ராம்ஸ், ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். மீனவ மக்களின் வாழ்வியலை கண்முன் கொண்டு வந்துள்ள எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, நடுக்கடலில் பாய்மர படகு போட்டி மற்றும் வீரர்களின் சாகசங்களை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி பிரமிக்க வைத்துள்ளார். குறிப்பாக, எடிட்டர் பிரதீப் ஈ.ராகவ் பணி பாராட்டத்தக்கது.
கலை இயக்குனர் டி.ஆர்.கே.கிரண், ஸ்டண்ட் இயக்குனர்கள் பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ ஆகியோரின் பணிகளும் குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கதைக்கேற்ற பாடல்கள் ஆரவாரமாக இருக்கின்றன. பின்னணி இசையை நங்கூரம் போல் ஆழமாகவும், அழுத்தமாகவும் பாய்ச்சி இருக்கிறார். சூரி அணி ஜெயிக்கும் என்பது முன்பே தெரிந்துவிடுவது மைனஸ் என்றாலும், அதை மறக்கடிக்கும் விதமாக, இருக்கை நுனிக்கு வரவழைக்கும் தந்திரத்தில் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி ஜெயித்திருக்கிறார்.
